நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் - ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் சங்கத்தின் பதவி காலம் நிறைவடைந்த நிலையில்,
2019 முதல் 2022 வரையிலான அடுத்த 3 ஆண்டுகளுக்கு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அந்த தேர்தலானது வரும் 23 ஆம் தேதி சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் - ஜானகி கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது
இந்த தேர்தலுக்கு காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென நடிகர் சங்கத்தின் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் விண்ணப்பிக்கபட்டு, அது பரிசீலனையில் உள்ள நிலையில்,தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறை ஆணையருக்கு உத்தரவிடுமாறு, நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் நடிகருமான விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன், "அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி அருகே முதல்வர், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகள் உள்ளதாலும், அந்த இடத்தில் தேர்தல் நடைபெற்றால் மக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதாலும், அந்த இடத்தில் தேர்தல் நடத்தினால் பாதுகாப்பு வழங்குவது சிரமம் எனவும், மாற்று இடத்தில் தேர்தல் நடத்துவது குறித்து நடிகர் சங்கம் முடுவெடுத்து தெரிவித்தால் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்" எனவும் தெரிவித்தார்.
அரசு தரப்பு விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி,
எம்.பி., எம்.எல்.ஏ தேர்தலை விட நடிகர் சங்க தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவது கவலை அளிப்பதாகவும், நீதிமன்றங்களுக்கு மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்பதால் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
வேண்டுமென்றால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு ஈ.சி.ஆர் அல்லது ஓ.எம்.ஆர் பகுதிகளில் தேர்தல் நடத்தலாம் என காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.
அதற்கு நடிகர் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேர்தலை சென்னைக்கு வெளியில் வெகு தொலைவில் நடத்தினால் வாக்களிக்க பெரும்பாலான வாக்காளர்கள் வர மாட்டார்கள் என தெரிவித்தார்.
அப்போது நீதிபதி, ”வேண்டுமென்றால் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகம், கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி போன்ற மாற்று இடங்களை” தேர்வு செய்ய நடிகர் சங்கத்திற்கு அறிவுறுத்தினர்.
நடிகர் சங்க தேர்தலைவிட மக்களின் பாதுகாப்பே முக்கியம் எனவும் தேர்தலில் வாக்களிக்க வரும் நடிகர்களை பார்க்க பொதுமக்கள் வருவார்கள், எனவே அந்த இடம் தேவையில்லாத பிரச்சனைக்கு வழி வகுக்கும் எனவும் தெரிவித்தார்.
இதற்கிடையே, இடையூறு ஏற்படாத வகையில், மாற்று இடத்தில் தேர்தல் நடத்துவது குறித்து நடிகர் சங்கம் பரிசீலித்து அதை நீதிமன்றத்தில் நாளை தெரிவிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார்.