நெய்வேலி நிலக்கரி கழகத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு 50 சதவீத வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒப்பந்த தொழிலாளர்களை தேர்வு செய்ய என்எல்சி நிர்வாகம் கடந்த ஜூலை 4ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து நெய்வேலி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் செயலாளரான கடலூரைச் சேர்ந்த சேகர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, நிலக்கரி பழுப்பு நிலக்கரி கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பில் 50 சதவீதத்தை இந்நிறுவனம் துவங்க நிலங்களை வழங்கியவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என 2009-ல் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஏற்கனவே நிலம் வழங்கி பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
என்எல்சி நிர்வாகம் தரப்பிலும், இது ஒப்புக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, நிலம் வழங்கியவர்களுக்கு 50 சதவீத வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். இதை என்எல்சி நி்ர்வாகம் சரியாக செய்துள்ளதா? என மத்திய அரசின் நிலக்கரித்துறை, தமிழக அரசின் சமூக நலம் மற்றும் தொழில்துறை முதன்மைச் செயலாளர், கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கண்காணிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.