குற்றவாளிகள் அடையாள அணிவகுப்புக்கு அனைத்து சிறைகளிலும் ஆறு மாதங்களில் சிறப்பு அறை அமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. திருப்பூரில் உள்ள காது கேளாத பள்ளியின் நிறுவன தலைவர் அப்பள்ளியில் பயின்ற 4 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது, குற்ற வழக்குகளில் சாட்சிகளின் வாக்குமூலம், மரண வாக்குமூலங்கள் போன்றவற்றை நடுவர் நீதிமன்றங்களிலிருந்து பெறுவதில் காவல் துறையினர் அலைக்கழிக்கப்படுவதாகவும், இதனால் பல வழக்குகளில் விசாரணை முடிந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய முடியாததால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டபூர்வ ஜாமீன் பெற்றுவிடுவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, சாட்சி வாக்குமூலங்கள், ஒப்புதல் வாக்குமூலங்கள், மரண வாக்குமூலங்களை நடுவர் நீதிமன்றங்கள் காவல்துறையினருக்கு வழங்கலாமா என்பது குறித்து முடிவெடுக்க வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார் நீதிபதி பிரகாஷ்.
இதுகுறித்து விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.என்.பிரகாஷ் அடங்கிய அமர்வு, மரண வாக்குமூலங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களை பதிவு செய்யும் நடுவர் நீதிமன்றங்கள், அவற்றின் சான்றளிக்கப்பட்ட நகல்களை வழக்கு புலன் விசாரணை அதிகாரிக்கு வழங்கலாம். அதை வழக்கு முடியும் வரை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டனர்.
மேலும், குற்றவாளிகள் அடையாள அணிவகுப்பு நடத்த அனைத்து சிறைகளிலும், சாட்சிகளை கைதிகள் பார்க்க முடியாத கண்ணாடியிலான சிறப்பு அறையை ஆறு மாதங்களில் அமைக்க வேண்டும் என நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
அதேபோல் இந்த உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என அனைத்து காவல் நிலையங்களுக்கும் இதை தமிழில் மொழிபெயர்த்து அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். அதேபோல இந்த உத்தரவை அனைத்து நீதித்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப தலைமை பதிவாளருக்கும் உத்தரவிட்டனர்