Madras HC interim order to Corporation notice on Banner issue: அனுமதியின்றி பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறைதண்டனையும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்ற மாநகராட்சியின் நோட்டீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை பள்ளிக்கரணை அருகே பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் மரணமடைந்ததை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி டிஜிட்டல் பேனர் அச்சகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில், அனுமதி இல்லாமல் டிஜிட்டல் பேனர் அச்சிடுவோருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி, கடந்த 19 ஆம் தேதி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் கோரி, டிஜிட்டல் பேனர் தயாரிப்பு நிறுவனம் சார்பில் பஷீர் அகமது என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், உயர்நீதிமன்றம் டிஜிட்டல் பேனர்களை தடை செய்யவில்லை என்றும், பிரிண்டிங் பிரஸ் மற்றும் டிஜிட்டல் பேனர் நிறுவனங்களுக்கு சீல் வைக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் பேனர் எங்கு வைக்க வேண்டும் என்று நாங்கள் கட்டுப்படுத்த முடியாது என்றும், யார் விதிகள் மீறி பேனர் வைத்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, தயாரிப்பு நிறுவனங்கள் மீது அரசு அதிகாரிகள் கோபத்தை காட்டக்கூடாது என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாரயணன் மற்றும் என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேனர் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஞானதேசிகன், யாருக்காக பேனர் அச்சடிக்கிறார்கள், எங்கு வைக்கிறார்கள் உள்ளிட்ட விவரங்கள் கேட்ட பின்பே நாங்கள் பேனர் அடிப்பதற்கான ஆர்டரை பெறுவோம் என்று உறுதியளித்தார்.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனு தொடர்பாக பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் டிஜிட்டல் பேனர்கள் தயாரிப்பது குற்றமல்ல எனவும் அதனை அனுமதியின்றி சட்டவிரோதமாக வைப்பது தான் குற்றம் என்று கருத்து
தெரிவித்தனர்.
பின்னர் மனுதாரர் நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும், மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அக்டோபர் விசாரணை 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.