Madras High Court issues notice to Ravindranath Kumar: தேனி நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி தொடர்ந்த வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம், எம்.பி ஓ.பி.ரவிந்திரநாத் குமார் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. பின்னர், மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தேனி மக்களவைத் தேர்தலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவிந்திரநாத் குமார் போட்டியிட்டார். திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 70,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் ரவிந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், ரவிந்திரநாத் குமாரின் வெற்றியை எதிர்த்து, தேனி தொகுதி வாக்காளர் மிளானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நடைபெற்று முடிந்த தேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பி. ரவிந்திரநாத் குமார் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்ததாகவும் அதற்கான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக பல கோடி ரூபாய் விநியோகம் செய்யப்பட்டதாகவும், இதே போன்று, வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் வந்தபோது, இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது. ஆனால், தேனி தொகுதியில் அதிக அளவில் புகார் வந்தபோதும் தேர்தல் ஆணையம் ஏன் தேர்தலை ரத்து செய்யவில்லை என்று கேள்வி எழுப்பி தேர்தல் ஆணையத்தின் மீது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
தேனி மக்களவைத் தொகுதி தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் செய்தும் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டும் அதிமுக வேட்பாளர் ரவிந்தரநாத் குமார் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளார் . எனவே அவருடைய வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என மிளானி அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், ஓ.பி. ரவிந்திரநாத் குமார் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.