சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா திரைப்படத்திற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா தயாராகியிருக்கிறது. கரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' திரைப்படத்தை வெளியிட தடை கோரி சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
காலா படத்திற்கு தடை கோரிய இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம் காப்புரிமை சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் உயர்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது. அதன்படி ராஜசேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் காலா படத்திற்கு தடை விதிக்ககோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்த போது, 1996 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை கரிகாலன் பட தலைப்பை ஆண்டு தோறும் புதுப்பித்து வந்த தென்னிந்திய வர்த்தக சபை அதன்பிறகு " கரிகாலன்" என்ற தலைப்பை புதுப்பிக்க மறுத்துவிட்டதாகவும். மேலும், தற்போது "கரிகாலன்" என்ற தனது தலைப்பை பயன்படுத்தி ரஜினியின் நடிப்பில் காலா படம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், எனவே தலைப்பை புதுப்பிப்பது தொடர்பான தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை விதிகளை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், காலா படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கபட்டது.
இந்த வழக்கில் இன்று உத்தரவிட்ட நீதிபதி கார்த்திகேயன், ‘கரிகாலன் என்ற காலா தலைப்பு என்னுடையது என்ற மனுதாரர் கூறியதற்கு எந்த ஆதாரம் இல்லை. மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுகள் மற்றும் புகாருக்கு எந்த அடிப்படை முகந்திரம் இல்லை. மேலும் படத்தின் கதை உள்ளடக்கிய விவரங்களை முறையாக பதிவு செய்யவில்லை.
எனவே அனைத்து மொழிகளிலும் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்க முடியாது மனு தள்ளுபடி செய்யப்படுகின்றது’ என உத்தரவிட்டார்.