ராஜிவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள ஏழு பேர் விடுதலை தொடர்பாக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க, சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு 2 வார காலம் அவகாசம் கோரியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை முன் கூட்டியே விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு , சட்டசபையில் 2014ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில், தமிழக சட்டசபை தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என தெரிவித்திருந்தது.
இதற்கிடையில், ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் 2012ல் தொடர்ந்த வழக்கு, இன்று (ஜூன் 3ம் தேதி) நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏழு பேர் விடுதலை தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள அமைச்சரவை தீர்மானம் கவர்னரிடம் நிலுவையில் உள்ளது, அதன் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க இரண்டு வார கால அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்தார். அதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதற்கிடையில் ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக உள்துறை செயலாளரிடம் கொடுத்த மனுவை பரிசீலித்து விரைந்து முடிவெடுக்க உத்தரவிடக்கோரி நளினி தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு அவகாசம் கோரியதை அடுத்து, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் அடங்கிய பெஞ்ச், விசாரணையை, 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.