மதுரையில் வசிக்கும் வெர்னிகா மேரி, மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், தமிழக அரசு கடந்த 2012ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையின்படி, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார்கள் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை தடுக்க மொபைல் மனநல ஆலோசனை மையம் அமைக்க உத்தரவிட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இந்த மொபல் ஆலோசனை மையங்கள் செயல்பாட்டில் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அதிகாரிகள் முறையாக பதிலளிக்கப்படவில்லை என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆகையால், இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை ஐகோர்ட் கிளையின் நிர்வாக நீதிபதி மகாதேவன், நீதிபதி சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனுவை விசாரித்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், '2012-ம் ஆண்டு வெளியான அரசாணையை இதுவரை முறையாக பள்ளிகளில் மொபைல் மனநல ஆலோசனை மையம் செயல்படுத்தாமல் இருப்பது ஏன்?' என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிக முக்கியமான ஒன்றாக மொபல் மனநல ஆலோசனை மையம் செயல்படும் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டத்தை அமைத்து முறையாக மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil