கல்வி சாராத நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவ, மாணவிகளை பங்கேற்க வைக்க அனுமதிக்க கூடாது என்று தொடரபட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி சாராத அரசியல் பொது நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவ, மாணவிகளை கட்டய படுத்தி கலந்து கொள்ள வைக்கிறார்கள். அதே போல மாலை நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு காலை முதல் அரங்கத்தில் காத்திருக்கிறார்கள். மேலும், அவர்களுக்கு எந்த வித அடிப்படை வசதிகள் செய்து தரபடவில்லை. இதனால் மாணவியர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர், அதனால் இதுபோன்ற கல்வி சாராத பொது நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவ, மாணவிகளை கட்டாயப்படுத்தி கலந்து கொள்ள வைப்பதை தடுக்க வேண்டும் என கல்வித்துறைக்கு உத்தரவிட கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி, ஆசிரியர்கள் போராட்டத்தின் போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிக்கு வந்த மாணவர்களை வகுப்பு, மற்றும் பள்ளியை விட்டு ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றி உள்ளனர், இது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இந்த செயல் தவறானது கண்டிக்கத்தக்கது என கூறினார்.
மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபட்ட ஆசியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இது போன்ற செயல்களை ஏற்று கொள்ள முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதி கிருபாகரன் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அக்டோபர் 6 ம் தேதி தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.