பெண் எஸ்.பி ஒருவர் ஐ.ஜி. முருகன் மீது தொடர்ந்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஏதேனும் அண்டை மாநில நீதிமன்றத்துக்கோ அல்லது டெல்லி நீதிமன்றத்துக்கோ மாற்ற உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பெண் எஸ்.பி. ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகத்தின் இணை இயக்குனர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார். ஐபிஎஸ் அதிகாரியான முருகன் மீது பாலியல் புகார் பெறப்பட்டதை அடுத்து, மாநில காவல்துறை, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் 2013 இன் படி விசாரணைக் குழுவை அமைத்தது. அப்போது இந்த விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண் எஸ்.பி. மாநில காவல் துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து சட்டப்படி, தனது புகார் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவை மாற்றி அமைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அதில், முருகனுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முருகனை லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனர் பதவியில் இருந்து பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரினார். ஏனென்றால், முருகன் தொடர்ந்து அங்கே பணியில் இருந்தால், தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் விசாரணைக் குழுவில் தனக்கு சாதகமாக செல்வாக்கு செலுத்த வாய்ப்புள்ளது என்று தான் அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு சிபி சிஐடி போலீஸார் போலீஸ் அதிகாரி முருகன் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 341, 354, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம், ஐ.பி.எஸ் அதிகாரி முருகன் லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்து பொருளாதார குற்றப்பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில்தான், பெண் எஸ்.பி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சிவி.கார்த்திகேயன் அமர்வு, கடந்த செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவில், தற்போது நடந்துகொண்டிருக்கும் இந்த வழக்கை அண்டை மாநில நீதிமன்றங்களுக்கோ அல்லது டெல்லி நீதிமன்றத்துக்கோ மாற்றுவதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் மாநில அரசிடம் வழிமுறைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்றம் போலீஸ் அதிகாரி ஐ.ஜி. முருகன் மீது பெண் எஸ்.பி. தொடர்ந்துள்ள பாலியல் வழக்கை அண்டை மாநில நீதிமன்றத்துக்கோ அல்லது டெல்லி நீதிமன்றத்துகோ மாற்றக்கூடும் என்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் காவல்துறையின் விசாரணையில் அதிருப்தியடந்ததால்தான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக கூறப்படுகிறது.
மேலும், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரணைக் குழுவை மறுசீரமைத்து நியாயமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை விசாரணை முகமை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.