ஸ்டெர்லைட் வழக்கு : நீதிபதிகள் சிவஞானம் , பவானி சுப்பராயன் அமர்வு விசாரணை

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரிய வழக்கு விசாரணை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பாவனி சுப்பராயன் அமர்வு விசாரிக்கும்

By: Updated: February 16, 2021, 05:18:56 PM

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரிய வழக்கு விசாரணை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பாவனி சுப்பராயன் அமர்வு விசாரிக்கும் என தலைமை நீதிபதி வி.கே.தஹில் மாணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் நோய் ஏற்படுவதாக கூறி அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு (2018) மே மாதம் 22ம் தேதி பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியாயினர்..

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியதால் அந்த ஆலையை உடனே மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி 2018 ஆம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. மேலும் ஆலைக்கு வழங்கிய குடிநீர் இணைப்பு, மின் இணைப்பையும் துண்டித்தது. ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண்அகர்வால் தலைமையில் குழு ஒன்றை நியமித்து உத்தரவிட்டது.
தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின் படி ஸ்டெர்லைட் ஆலையில் தருண் அகர்வால் குழு நேரடி ஆய்வு செய்தது. அதன் அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 ந்தேதி தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில், “ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது. ஆலை நிர்வாகத்தால் வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும். 15 நாட்களுக்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யபட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின் தற்போதைய நிலையே தொடரவேண்டும் எனவும் ஆலையை திறப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற கிளை உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும் மனு செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தனது மனுவில் கூறி இருந்தது. இதற்கிடையே வேதாந்தா நிறுவனமும் உச்ச நீதிமன்றத்தில் தனியாக ஒரு மனு தாக்கல் செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பாலிநாரிமன், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க இயலாது. அந்த ஆலையை திறக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு அடுத்தடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள உரிமை உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடும் அதிகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு கிடையாது. எனவே தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் அனுமதி பெற்றதை ஏற்க இயலாது. இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதனையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது. அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலையை மூடி முத்திரையிட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் உத்தரவு என்பது தவறானது எனவும் ஆலையால் மாசு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பாக எந்தவிதமான ஆதாரபூர்வமான தகவல்களும் அரசிடம் இல்லை. தங்கள் நிறுவனத்திற்கு எதிராக அரசு தரப்பில் கூறும் குற்றச்சாட்டுக்கள் என்பது முற்றிலும் தவறானது எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே ஸ்டெர்லைட் நிறுவனம் செயல்படுவதாகவும் ஆலைக்கு அனுமதி அளித்த போது விதிக்கப்பட்ட விதிமுறைகளை ஆலை நிர்வாகம் கடைபிடித்து வருவதாகவும். தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலையை மூடுவதற்கு உத்தரவிடுவதற்கு முன்னர் தங்கள் தரப்பில் எந்த விளக்கமும் அரசு பெறவில்லை ஒருதலை பட்சமாக அரசு செயல்பட்டுள்ளது. எனவே ஆலையை மூடி சீல் வைத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு சட்ட விரோதமானது எனவும் அதனை ரத்து செய்ய வேண்டும். ஆலைக்கு மீண்டும் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் இடைக் காலமாக ஆலை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஆலை நிர்வாகத்திற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் அதற்கு தேவையான வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆலை பராமரிப்பு தொடர்பாக எந்த விதமான இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஸ்டெர்லைட் ஆலை மனு தொடர்பாக தமிழக அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் இடைக்காலமாக ஆலையை பராமரிக்க திறக்க அனுமதிக்க முடியது என தெரிவித்தனர். மேலும் தற்போதைய நிலையில் எந்த ஒரு புதிய உத்தரவையும் அல்லது இடைக்கால பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதிக்க கோரிய வழக்கு இன்று நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி கே.கே. சசிதரன் தெரிவித்தார். ஏற்கனவே மதுரைக் கிளையில் இதுசம்பந்தமான வழக்கை விசாரித்த உத்தரவு பிறப்பித்துள்ளதால் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என நீதிபதி விளக்கம் அளித்தார். மேலும் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவது தொடர்பாக தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாக நீதிபதிகள் சசிதரன் மற்றும் ஆஷா அமர்வு தெரிவித்தது.இதனையடுத்து தலைமை நீதிபதி அமர்வில் ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் முறையிட்டார். முறையீட்டை கேட்ட நீதிபதிகள் பிற்பகல் தெரிவிப்பதாக கூறினர். மேலும் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவது தொடர்பாக தலைமை நீதிபதி வி.கே.தஹில் ராமணிக்கு பரிந்துரை செய்வதாக நீதிபதிகள் சசிதரன் மற்றும் ஆஷா அமர்வு தெரிவித்தது.
இதனையடுத்து தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமாணி அமர்வில் ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் முறையிட்டார். முறையீட்டை கேட்ட தலைமை நீதிபதி மாலையில் புதிய அமர்வை அமைப்பதாக தெரிவித்தார். அதன்படி ஸ்டெர்லைட் வழக்கை இனி உயர்நீதிமன்ற நீதிபதி டி.எஸ். சிவஞானம், நீதிபதி பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Courts News by following us on Twitter and Facebook

Web Title:Sterlite reopen case justice sivagnanam chennai highcourt

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X