கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என வி.சி.க எம்.பி ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை வலியுறுத்திப் பேசினார்.
நாடாளுமன்றத்தில் விதி 377-ன் கீழ் கேள்வி எழுப்பிய வி.சி.க எம்.பி ரவிக்குமார், கீழடி அகழாய்வு அறிக்கையை 9 மாதங்களுக்குள் வெளியிட கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஆனால், காலக் கெடு முடிந்தும் அறிக்கை வெளியிடப்படவில்லை, இது நீதிமன்ற அவமதிப்பு என்று சாடியதுடன் கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கீழடி அகழாய்வு 2015-ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் (ASI) தொடங்கப்பட்டது. கி.அமர்நாத் ராமகிருஷ்ணா இந்த அகழாய்வுப் பணியை தலைமை தாங்கி நடத்தினார். பின்னர், 2018-ம் ஆண்டில் இருந்து தமிழ்நாடு தொல்லியல் துறையால் கீழடியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வு மையம் தமிழ்நாட்டில் மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி ஊராட்சியில் உள்ள கீழடி கிராமத்தின் பள்ளிச்சந்தைத் திடல் மேட்டுப்பகுதியில் உள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சியில் இதுவரை இங்கு 5,820 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வீடுகளில் குளியலறைகள் இருந்ததற்கான சான்றும் கிடைத்துள்ளது. தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு நிறங்களிலான ஏறத்தாழ 1000 கிலோகிராம் திணிவுடைய மண் ஓடுகள் அகழ்வாராய்ச்சியின் பொழுது கிடைத்திருக்கின்றன. அடுத்த கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது.
கீழடி அகழாய்வு குறித்து மத்திய அரசின் தொல்லியல் துறைதான் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட வேண்டும். அதன்படி, கீழடியில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட முதல் இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த ஆண்டு பிப்ரவரியில் உத்தரவிட்டது.
மேலும், தொல்லியல் பொருட்களின் காலகட்டத்தை கண்டுபிடிக்கும் வகையில் மத்திய அரசின் கீழ் தமிழ்நாட்டில் அதி நவீன கதிரியக்க கார்பன் பகுப்பாய்வு மையத்தை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியது. கீழடி அகழ்வாய்வின் முழு அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் ஏழு மாதங்களுக்குள் தயாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். ஆனால், இதுவரை கீழடி அகழாய்வு குறித்த அறிக்கையை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை.
இந்நிலையில், கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என வி.சி.க எம்.பி ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் விதி 377-ன் கீழ் கேள்வி எழுப்பிய வி.சி.க எம்.பி ரவிக்குமார், கீழடி அகழாய்வு அறிக்கையை 9 மாதங்களுக்குள் வெளியிட கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஆனால், காலக் கெடு முடிந்தும் அறிக்கை வெளியிடப்படவில்லை, இது நீதிமன்ற அவமதிப்பு என்று சாடியதுடன் கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.