கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி அதிகாலை பயங்கர சத்தத்துடன் மாருதி கார் ஒன்று வெடித்து சிதறியது. காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை காவல்துறையினர் சோதனை செய்ததில் 75 கிலோ வெடி மருந்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆணி, வேறு இரும்பு பொருட்கள் இருந்ததால் இது சதி செயலாக இருக்கலாம் எனப் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு என்.ஐ.ஏ ( தேசிய புலனாய்வு முகமைக்கு) மாற்றப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா(25), முகமது அசாருதீன்(23), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26), அப்சர்கான் உள்பட 11 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். 11 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. என்.ஐ.ஏ அதிகாரிகள் வ்வப்போது கைது செய்யப்பட்டவர்களை கோவைக்கு அழைத்து வந்து அவர்கள் குடியிருந்த பகுதிகளில் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இவ்வழக்கு தொடர்பாக உயிரிழந்த ஜமேசா முபினின் மனைவியிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முகமது அசாருதீன், பெரோஸ், நவாஸ் இஸ்மாயில், உமர் ஃபரூக், பெரோஸ்கான் ஆகிய ஐந்து பேரை சென்னை சிறையில் இருந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் காவலில் எடுத்து கோவைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 7 நாட்கள் காவலில் எடுத்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil