கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஒரு வார காலமாக விசைத்தறிகளை மூடி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் ஒன்றரை லட்சம் விசைத்தறிகள் மூடப்பட்டுள்ள நிலையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இதனை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்களுடன் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் இன்று பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தையில் அன்னூர், தெக்கலூர், சோமனூர், கண்ணம்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விசைத்தறி சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய, கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத் தலைவர் பூபதி, கடந்த 15 மாதங்களாக 2022ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்த கூலியை உயர்த்தி தர வலியுறுத்தி வருவதாகவும் தற்போது வரை 10 முறை பேச்சு வார்த்தை நடைபெற்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு இருப்பதை குறிப்பிட்டார்.
தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளை மூடி வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருவதாகவும் இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் அழைப்பின் பேரில் இன்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தையில், கூலி உயர்வு இருந்தால் மட்டுமே விசைத்தறி துறைகளை காப்பாற்ற முடியும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியிருப்பதாகவும், எங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரும் பரிசீலிப்பதாக கூறியிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் மாவட்ட நிர்வாகம் விசைத்தறி துறை ஜவுளி துறை ஆகியவற்றை இணைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறியுள்ளனர் என்றார். தற்பொழுது நடைபெற்று வரும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக நாளொன்றுக்கு 25 முதல் 30 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் இந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
2022 ஒப்பந்த கூலியிலிருந்து எங்களுக்கு 50% முதல் 60% கூலி உயர்வு வேண்டுமென்று கோரிக்கை விடுதிருப்பதாக தெரிவித்தார்.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்