கோவை மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய சம்பளத்தை வழங்கவில்லை என தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம். கோவை மாவட்டத்தில் பணிபுரியும் மாநகராட்சி ஊழியர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாவட்ட ஆட்சியர் அறிவித்த 721 ரூபாய் சம்பளம் வழங்கிட வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து பல்வேறு கட்டப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது.
இந்த நிலையில் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று கோவை மாநகராட்சி விக்டோரியா மஹாலில் கடந்தாண்டு டிசம்பர் 30-ம் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் கோவை மாநகராட்சியின் சார்பில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் ரூ. 648 என சம்பளத் தொகை உயர்த்தி வழங்கிட வேண்டும் எனச் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று கோவை மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 421 ரூபாய் என்ற வீதத்தில் ரூ.12,865 மொத்த சம்பளம் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மன்றத்தில் 648 ரூபாய் என அறிவித்துவிட்டு 421 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதற்கு தூய்மை பணியாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இந்த நிலையில் கோவை மாநகராட்சி வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. அப்போது பணியாளர்கள் மாநகராட்சி ஆணையர் பிரதாப், மேயர் கல்பனா ஆகியோரை சூழந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாமன்றத்தில் அறிவித்த சம்பளம் ஏன் வழங்கவில்லை என ஆணையரிடம் கேள்வி எழுப்பினர். ஆணையர், மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறுகையில், “இ.எஸ்.ஐ, பி. எப் பணம் பிடித்தது போக தான் தற்போது அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் தூய்மை பணியாளர்கள் தீர்மானத்தில் அறிவித்த சம்பளம் கைக்கு வரவேண்டும்” என தெரிவிக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் கூறியதாவது, “அறிவித்த 648 ரூபாய் சம்பளம் தராமல் சம்பளத்தை குறைத்து தந்துள்ளனர். தற்போது 415 ரூபாய் தான் கைக்கு வந்துள்ளது. தொழிலாளர்களை ஏமாற்றும் போக்கில் மாநகராட்சி செயல்படுகிறது. தொழிலாளர்களின் உழைப்பை மாநகராட்சி சுரண்டுகிறது. தற்போது கூட்டமைப்பில் பேசி முடிவெடுத்து மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்தனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை