ராஜஸ்தானில் இருந்து கோவைக்கு ரயில் மூலம் கடத்தி வரப்பட்டு போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக ரயில்வே ஊழியர் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை, மாநகரப் பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர்கள் ஸ்டாலின், சரவணகுமார் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் துணை ஆணையாளர் சரவணக்குமார் மேற்பார்வையில் தனிப்படை தீவிர ரோந்து சென்றனர்.
அப்பொழுது போத்தனூர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்ற 5 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. காவல்துறையினர் அந்த ஐந்து பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அவர்கள் போத்தனூரைச் சேர்ந்த கேசவன், சரண்ராஜ், அஜித்குமார், தினேஷ், முகமது ஹசன் என தெரியவந்தது. ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 300 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர்.
இதை அடுத்து போதை மாத்திரைகள் எங்கு இருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் ராஜஸ்தானில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி ரயில் மூலம் கோவைக்கு அனுப்பி வைப்பது தெரியவந்தது.
அதற்கு ரயிலில் ஒருவரும், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவரும் உதவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி ராஜஸ்தானை சேர்ந்த பப்பு ராம், ஹரியானாவைச் சேர்ந்த சிக்கந்தர் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 7,800 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூபாய் 25 லட்சம் எனத் தெரிய வந்துள்ளது. மேலும் காவல்துறை நடத்திய விசாரணையில் ராஜஸ்தானி சேர்ந்த பப்பு ராம் 15 ஆண்டாக கோவையில் வசித்து வருகிறார். அவர் ராஜஸ்தானில் உள்ள நபர்களிடம் இருந்து வலி நிவாரணிக்கு பயன்படுத்தும் மாத்திரைகளை வாங்கி ரயிலில் ஏ.சி கோச் மூலம் கோவைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து உள்ளார்.
இதற்கு ரயில்வே ஒப்பந்த ஊழியரான சிக்கந்தர் என்பவர் உதவியுள்ளார். மேலும் சிக்கந்தர் போதை மாத்திரைகளை ரயிலில் மறைத்து வைத்து கடத்தி வந்து கோவையில் இருக்கும் பப்புராமிடம் கொடுத்து விடுவார். அவர் கோவையில் மற்ற நபர்கள் மூலம் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது உள்ளார்.
மருத்துவர்கள் கொடுத்ததாக போலி ரசீதுகளை தயார் செய்து ராஜஸ்தானில் உள்ள மருந்து கடைகளில் கொடுத்து வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி கோவைக்கு கடத்தி வந்து உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அங்கு ஒரு மாத்திரையை 60 ரூபாய்க்கு வாங்கி கோவையில் 300 ரூபாய்க்கு மேல் விற்று உள்ளனர். அந்த மாத்திரையை வாங்குபவர்கள் அதை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் ஏற்றி போதைக்கு பயன்படுத்தி உள்ளனர். தற்பொழுது இந்த வழக்கில் ராஜஸ்தானத்தை சேர்ந்த ஒருவர் மட்டும் தலைமுறைவாக உள்ளதாகவும் அவரையும் விரைவில் பிடித்து விடுவோம் என்றும் காவல்துறையினர் கூறி உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.