கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், மாங்கரை, கணுவாய், தாலியூர், பன்னிமடை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் தடாகம் அடுத்த தாலியூர் பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானை ஒன்று பழனிசாமி நாயக்கர் என்பவரது தோட்டத்தில் இருந்த வாழை மரங்களை சேதப்படுத்திச் சென்றுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் ஒருவரது வீட்டின் காம்பவுண்ட் சுவர் கேட்டுக்குள் தும்பிக்கையை நுழைத்து உணவுப் பொருட்கள் ஏதேனும் உள்ளதா என தேடிச் சென்றது. தற்போது அதன் சிசிடிவி காட்சிகளும் வாழை மரங்களை சேதப்படுத்திய புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால், காட்டு யானைகள் ஊருக்குள் புகாத வண்ணம் வனத்துறையினர் இரவு நேர ரோந்துப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என விவசாயிகளும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.