கோயம்புத்தூர் மாவட்டத்தில் வனப்பகுதி ஒட்டியுள்ள வீடுகள் மற்றும் விளை நிலங்களுக்குள் கடந்த சில நாட்களாகவே காட்டு யானைகள் அட்டகாசம் இருந்து வருகிறது.
இரவு நேரங்களில் வரும் காட்டு யானைகள் ஊருக்குள் உலா வருவதும் வாழைமரங்களை சாப்பிடுவது ரேசன் கடைகளை சூறையாடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டம் பன்னிமடை அருகே திப்பனூர் கிராமம் மலை அடிவாரத்தில் உலா வந்த ஒற்றை காட்டு யானை ஒன்று அங்கு இருந்து வீட்டை தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
யானையை கண்ட வீட்டின் உரிமையாளர் கைக்கூப்பி அன்பாக பேசி அனுப்பி வைக்கும் வீடியே ஒன்று வெளியாகி உள்ளது.
வீட்டு வாசலில் நின்ற யானையை கண்ட உரிமையாளர், “ கணேசா போ சாமி” என அன்பாக கைக்கூப்பி பேசி அனுப்பி வைத்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை இரவு நடந்துள்ளது. ”கணேஷா போ சாமி, வீட்டில் ஒன்றும் இல்லை” என உரிமையாளர் கூறிய சில நிமிடங்களிலேயே யானை எதுவும் செய்யாமல் சென்றது.
சிறிது நேரம் வீட்டு வாசலில் நின்று பார்த்த யானை பின்னர் அங்கு இருந்து வனப் பகுதிக்குள் சென்றது. இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“