கோயம்புத்தூரை சேர்ந்த வினோத்குமார், ஸ்டான்லி ஜோன்ஸ், ஆனந்தகுமார் ஆகியோர் கோயம்புத்தூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதில் தங்களது செல்போன் எண்ணை பயன்படுத்தி தங்களுக்கு தெரியாமல் கிரெடிட் கார்டு, வங்கி கணக்கு, செல்போன் கடன் அப்ளிகேஷன் மூலம் பணம் எடுத்து மோசடி நடந்ததாக புகார் அளித்தனர். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், வினோத்குமார். ஸ்டான்லி ஜோன்ஸ், ஆனந்த குமார் ஆகியோரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்தது கோவைப்புதூரை சேர்ந்த விக்னேஷ் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் விக்னேஷ் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவர். அவர் பலரிடம் நண்பராக பழகி, மோசடி செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர் நண்பர்களிடம் பேசும் போது, தன்னிடம் இருக்கும் செல்போனில் பிரச்சினை உள்ளது. உங்களுடைய செல்போனை கொடுங்கள் என கேட்டு வங்கி கணக்கு, குறுந்தகவல், வங்கி கடன் விவரங்களை பார்த்து தனது செல்போன் எண்ணிற்கு நண்பர்களுக்கு தெரியாமல் மாற்றி உள்ளார். ஒ.டி.பி. எண்ணையும் தனது செல்போன் எண்ணிற்கு வரும் வகையில் மாற்றியதாக தெரிகிறது. அதை வைத்து அவர் வங்கி கணக்கு, செல்போன் கடன் செயலி (லோன் ஆப்) மூலம் கடன் பெற்று 3 பேரிடம் இவர் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோசடி செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட 24 சிம் கார்டுகள், 8 செல்போன்கள். லேப்டாப், போலி கிரெடிட் கார்டு, ஏ.டி.எம்.கார்டு. பிரிண்டர், 3 கார் ஆகியவற்றை போலீசார்
பறிமுதல் செய்தனர்.
விக்னேஷ் கடந்த ஆண்டு இதேபோல் மோசடி செய்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப் பட்டார். ஆனாலும் இவர் தனது நண்பர்கள் வட்டாரத்தில் தொடர்ந்து மோசடி செய்து வந்ததும் தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை