/indian-express-tamil/media/media_files/ld4P9Oz7mczhTmn80NZ6.jpg)
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான தேக்கம்பட்டி,நெல்லித்துறை,வெள்ளியங்காடு,கெம்மாராம்பாளையம்,காளம்பாளையம,தோலம்பாளையம்,ஓடந்துறை,சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள், மான், காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் இருந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து விளைநிலங்களில் பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.
அவ்வப்போது மனித - வனவிலங்கு மோதலும் நிகழ்ந்து வருகின்றன. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகளை தடுக்க வனத்துறையினரும் வனப்பகுதியை ஒட்டி அகழி அமைத்தல், மின் வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், வனவிலங்குகளை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.
வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க காரமடை அடுத்துள்ள கெம்மராம்பாளையம் ஊராட்சியில் தற்போது வளர்ந்து வரும் நவீன தொழில் நுட்பமான "ஏ.ஐ" ("Artificial intelligence") எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அரை கி.மீ தொலைவிற்கு வனவிலங்குகளின் ஊடுருவலை தடுத்து சாதித்துள்ளனர். இந்த சோதனை முயற்சியில் யானைகள் வழக்கமாக ஊருக்குள் நுழையும் இடத்தை கண்டறிந்து அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.
அத்துடன் ஒலிபெருக்கியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோ மானிட்டரில் இணைக்கப்பட்டு அங்கிருந்து வனத்துறை,ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்களுக்கு சமிக்ஞை(சிக்னல்) கொடுக்கும் வகையில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி கேமரா வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து 400 மீட்டர் தொலைவிற்குள் வனவிலங்குகளின் நடமாட்டம் தென்பட்டால் இந்த கேமரா மூலம் கண்டறியப்பட்டு ஏஐ தொழில்நுட்ப கருவிக்கு சிக்னல் அனுப்புகிறது. அங்கிருந்து வனப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள சைரன், மனிதர்கள் சப்தமிடும் முறை, ஜேசிபி இயந்திரம் இயங்கும் சப்தம் உள்ளிட்ட பல்வேறு சப்தங்களை தானாகவே ஒலியாக வெளியிடுகிறது.
அவ்வாறு வெளியிடப்படும் சப்தத்தை கேட்டு வனவிலங்குகள் சற்றுநேரம் நின்று கவனித்த பின்னர் அங்கிருந்து மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்புகின்றன. இந்த சோதனை முயற்சியின் பயனாக கடந்த சில மாதங்களில் சில முறை மட்டுமே வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேற முயற்சித்துள்ளன.
பின்,ஒலிபெருக்கியில் வெளியிடப்படும் சப்தங்களைக் கேட்டவுடன் அங்கிருந்து வனப்பகுதிக்கு திரும்பியுள்ளன. இதனால் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது.இந்த சோதனை முயற்சி தற்போது வெற்றி அடைந்துள்ளது.
தற்போது சோதனை முயற்சியாக கெம்மாராம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட இருளர்பதி பழங்குடியின கிராமத்தில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த கேமரா,ஒலிபெருக்கி பொருத்தப்பட்டு உள்ளது. இக்கருவி பொருத்தப்பட்டதன் பயனாக கடந்த ஆறு மாதத்தில் வெறும் நான்கு முறை மட்டுமே காட்டு யானைகள் ஊடுருவ முயற்சித்துள்ளன. ஒலிபெருக்கியில் இருந்து வெளியிடப்பட்ட சப்தத்தை கேட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பியுள்ளன.
இதனால் விளைநிலங்களில் பயிர்கள் சேதம் செய்வது தடுக்கப்படுவதுடன், மனித - வன உயிரின மோதல்களும் தடுக்கப்பட்டுள்ளன. தற்போது சோதனை முறையில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் படிப்படியாக தங்களது ஊராட்சிக்குட்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு முதன்முறையாக கருவிகள்,ஒலிபெருக்கி உள்ளிட்டவற்றிற்காக ரூ.70 ஆயிரம் செலவு செய்யப்பட்டுள்ளது. திட்டம் அனைத்து பகுதிக்கும் செயல்படுத்தப்படும் போது செலவு மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றனர்.
பழங்குடியின முதியவர் ஆறுமுகம் கூறுகையில், எங்களது பகுதி வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் அவ்வப்போது காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதம் செய்து வந்தது. தற்போது இந்த கருவி பொருத்தப்பட்டிருப்பதன் காரணமாக வனவிலங்குகள் 400 மீட்டர் தொலைவிற்குள் கேமராவில் சிக்கினால் ஒலிபெருக்கி தானாகவே இயங்க ஆரம்பித்து விடுகிறது.
இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது என்பது எங்களுக்கு உடனடியாக தெரிய வருகிறது. அருகில் இருக்கும் மக்களுடன் இணைந்து வன விலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு ஏதுவாக உள்ளது. அதேபோல் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலைகளை கடந்து செல்லும் போது ஒலிபெருக்கி மூலமாக வரும் சப்தத்தை கேட்டு வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதை கண்டு கொள்கிறோம். தொடர்ந்து நாங்கள் எச்சரிக்கையாக இருந்து வருகிறோம் என்றார் ஊராட்சி மன்ற தலைவி செல்வி நிர்மலா பொன்னுச்சாமி.
பழங்குடியின மூதாட்டி பத்திரம்மாள் கூறுகையில் எங்களது பகுதிக்குள் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாகவே இருந்து வந்தது. இதனால் வனப்பகுதி ஒட்டி அமைந்துள்ள எங்களது பகுதியில் பயிர் சேதம் என்பது அதிகமாகவே இருந்து வந்தது. இதனால் விவசாய நிலங்களுக்குச்செல்ல முடியாமலும்,வீட்டில் இருக்க முடியாமலும் அச்சத்துடனே வாழ்ந்து வந்தோம்.
தற்போது இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வருவது முன்கூட்டியே தெரிய வருகிறது. அதன்படி நாங்கள் எச்சரிக்கையாக இருந்து வருகிறோம் என்றார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.