கோவை போத்தனூர் செட்டிப்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்த திண்டுக்கல் மாவட்டம் மணியாரம்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் ஆறுமுகம் (வயது 35). அவருடன் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சியாஸ் செல்வம் (வயது35) என்பவரும் தங்கியிருந்தார்.
கடந்த 25-ம் தேதி இரவு இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, சியாஸ் செல்வம் டி.வி.யில் அதிக சத்தம் வைத்து பாட்டு கேட்டுக் கொண்ட இருந்தார். தூங்க வேண்டும் என்பதால் பாட்டு சத்தத்தை குறைக்கும்படி ஆறுமுகம் கூறி உள்ளார். ஆனால் சியாஸ் செல்வம் சத்தத்தை குறைக்காமல் இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. ஆத்திரமடைந்த சியாஸ் செல்வம் மது பாட்டிலை உடைத்து ஆறுமுகத்தை சரமாரியாக குத்தினார்.
இதில், பலத்த காயமடைந்த ஆறுமுகம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சியாசை தேடி வந்தனர். கேரளாவின் பல பகுதிகளில் தலைமறைவாக இருந்த சியாஸ் இன்று கோவை, மதுக்கரை பகுதி டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு பாலத்தில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது, ஆம்புலன்ஸ் வருவதை பார்த்து போலீஸ் வாகனம் என நினைத்து அவர் பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் காலில் பலத்த காயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்ட போலீசார் கைது செய்தனர்.
பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த போலீசார், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். சியாஸ் மீது கேரளாவில் 17 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.