Covai Martin Lottery Company Cashier Palanisamy Murder : லாட்டரி அதிபர் மார்ட்டின் காசாளர் பழனிச்சாமியின் மரணம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடி'க்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மரணம் தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் விசாரணை நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனங்களில் ஏப்ரல் 30 ஆம் தேதி வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அத்துடன் மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரியில் காசாளராக பணிபுரிந்து வரும் கோவை வடமதுரையைச் சேர்ந்த பழனிச்சாமியிடம் வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி காரமடை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு அருகே உள்ள குட்டையில் காசாளர் பழனிச்சாமி பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, வருமான வரித்துறையினரின் சித்ரவதை காரணமாகவே தன் தந்தை மரணம் அடைந்துள்ளதாகவும், தந்தையின் உடலில் ரத்த காயங்கள் இருப்பதாலும் இது கொலை எனவும் கூறி, இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி பழனிச்சாமியின் மகன் ரோஹின்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் கார்த்திக்கேயன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் வந்தது.
அப்போது, பழனிச்சாமியின் பிரேத உடலின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த அறிக்கையில் திருப்தி அடையாத நீதிபதிகள், பழனிச்சாமியின் உடலில் உள்ள காயங்கள் அவர் உயிரோடு இருக்கும் போதே ஏற்பட்டதா? அல்லது அவர் இறந்த பிறகு யாரேனும் காயங்கள் ஏற்படுத்தினார்களா? என சந்தேகம் எழுப்பினர். தற்போது பழனிச்சாமியின் உடல் பதப்படுத்தப்பட்டுள்ள நிலை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், தண்ணீர் குட்டையில் மூழ்கி இருந்த பழனிச்சாமியின் வாயில் ரத்த காயங்கள் இருந்தது குறித்தும், கண் மற்றும் நாக்கு பிதுங்கி இருந்தது குறித்தும் அறிக்கையில் முழுமையான விளக்கம் இல்லை எனவும் தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நேற்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து அறிக்கையை கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் தாக்கல் செய்தனர். மேலும் தற்போது எஸ்.சி/எஸ்.டி சட்ட பிரிவை இணைத்தும் விசாரிக்கபட்டு வருவதாக தெரிவிக்கபட்டது.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், மனுதரார் தந்தை விசாரணை அமைப்பின் விசாரணையில் நிலுவையில் உள்ள போது தான் மரணமடைந்துள்ளார். எனவே அவரின் கோரிக்கை நிரகரிக்க முடியாது. அதே நேரம் தற்போதைய விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை குறித்த நாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
மரணம் தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிடுகிறேம். மாஜிஸ்ட்ரேட் யார் என்பதை இரண்டு வேளை நாட்களுக்குள் கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி நியமிக்க வேண்டும். மாஜிஸ்ட்ரேட் சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் மறு பிரேத பரிசோதனை குறித்து முடிவு செய்யலாம்.
மறு பிரேத பரிசோதனை செய்வது தொடர்பாக மாஜிஸ்ட்ரேட்டிடமே குடும்பத்தினர் அனுக வேண்டும். பதப்படுத்தப்பட்டுள்ள பழனிச்சாமியின் உடலை பார்க்க குடும்பத்தினருக்கு அனுமதி வழங்க வேண்டும். மாஜிஸ்ட்ரேட் விசாரணையில் திருப்தி இல்லாவிட்டால் பழனிச்சாமியின் மகன் மீண்டும் நீதிமன்றத்தை அனுகலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
லாட்டரி மார்டின் நிறுவன காசாளர் தற்கொலை விவகாரம்: வருமான வரித்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!