கோவை பொள்ளாச்சி அருகே சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த இரண்டரை லட்சம் ரூபாயை
கண்டெடுத்த இளைஞர் போலீசார் மூலம் உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த தேவம்பாடி வலசு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் என்பவர் தனியார் நிறுவன ஊழியர் ஆவார். இவர் வழக்கம் போல் தனது ஊரிலிருந்து பணி நிமித்தமாக பொள்ளாச்சிக்கு வந்துள்ளார்.
அப்போது ஜமீன் முத்தூர் தனியார் பள்ளி அருகே சாலையில் கேட்பாரற்ற நிலையில் ரூபாய் இரண்டரை லட்சம் கிடந்ததாக தெரிகிறது.
இதனை அடுத்து அவ்வழியாக வந்த சந்தோஷ் குமார் சாலையில் கிடந்த இரண்டரை லட்சத்தை பத்திரமாக எடுத்து வந்து அப்பகுதியில் உள்ள மேற்கு காவல் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
பணத்தை தவற விட்டு நபர்கள் குறித்து காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
சாலையில் தவறவிட்ட பணம் யாருடையது என கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறை அதிகாரிகள் சந்தோஷ் குமார் மூலம் ரூபாய் 2.50 லட்சத்தை தவறவிட்ட காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர மூர்த்தி என்பவரிடம் ஒப்படைத்தனர்.
பொள்ளாச்சி அடுத்த கிராமப் பகுதியில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார்,சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தது அப்பகுதி மக்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பல தரப்பினரும் சந்தோஷ் குமார் செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.