கோவையில் தனியார் பள்ளியில் வயதுக்கு வந்த 8 ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்குள் சென்று முழு ஆண்டு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது.
தற்பொழுது தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளும் முழு ஆண்டு தேர்வு நடைபெற்றுக் கொண்டு உள்ளது. அந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மாணவி கடந்த ஐந்தாம் தேதி அன்று வயதுக்கு வந்து விட்டதாக தெரிகிறது.
முழு ஆண்டு தேர்வு நடப்பதால் தேர்வு எழுத அந்த பள்ளிக்குச் சென்று உள்ளார். இந்நிலையில் கடந்த 7 ம் தேதி அறிவியல் தேர்வு 9 ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகளை நடைபெற்ற போது அந்த மாணவியை தேர்வு மையத்தில் அனுமதிக்காமல் பள்ளி வகுப்பறை முன்பு உள்ள படியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்து உள்ளனர்.
இந்நிலையில் மாணவியை பார்ப்பதற்காக அங்கு வந்த அவரது தாய் மற்றும் உறவினர் ஒருவர் சென்று உள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அந்த மாணவியிடம் இங்கு ஏன் அமர்ந்து தேர்வு எழுதுகிறாய்..? வகுப்பறைக்குச் சென்று எழுதவில்லையா என்று கேள்வி கேட்டனர். அந்த மாணவி பதில் பேச முடியாமல் செய்வதறியாது இருந்தது. அதனை உறவினர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார்.
இதுகுறித்து பதறி துடித்து அந்த தாய் அங்கு இருந்த ஆசிரியர்களிடம் கேட்கும் போது இங்கு அப்படித் தான் நடக்கும், என நீ வேணும்னா..,வேறு பள்ளியில் சேர்த்துக் கொள் என ஆசிரியர்கள் திமிரோடு பதில் அளித்து உள்ளனர்.
கல்வித் துறை அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் ஐயா ஸ்டாலின் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியினர் அந்த வீடியோக்களை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கையும் எடுத்து உள்ளனர்.
இதுகுறித்து வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியில் விசாரணை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இனிமேல் இதுபோல் மாணவிகளை தனியாக அமர வைக்கக்கூடாது என அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், பூப்பெய்தி சில நாட்களுக்குப்பின் பள்ளி சென்ற மாணவியை, வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வெழுத வைத்த தனியார் பள்ளியிடம் விளக்கம் கேட்டு முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார். பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும், விசாரணைக்குப் பின் பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.