சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
தமிழக - கேரளா எல்லையான வாளையார் அருகே க.க.சாவடி வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அந்த சோதனைச் சாவடியில் உள்ள பதிவறையில் இருந்து ரூபாய் ஒரு லட்சம், கோப்புகள் வைக்கும் டேபிளில் இருந்து ரூபாய் 17,000, மேஜை டிராயரில் இருந்து ரூபாய் 30,500 ஆகியவை இருந்தன. இது தொடர்பாக அங்கு பணியில் இருந்து மோட்டார் வாகன ஆய்வாளர் சதீஷ் ஜெயச்சந்திரன், உதவியாளர் லோகநாதன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆனால் அவர்களால் அந்த பணத்துக்கு கணக்கு காட்ட முடியவில்லை. இதை அடுத்து கணக்கில் வராத ரூபாய் ஒரு லட்சத்து 47,500 போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோன்று பொள்ளாச்சி, பாலக்காடு சாலை கோபாலபுரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் நடந்த சோதனையில் ரூபாய் 60,000 பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சதீஷ் ஜெயச்சந்திரன், உதவியாளர் லோகநாதன் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
மேலும் க .க .சாவடி சோதனை சாவடியில் ரூபாய் ஒரு லட்சத்துக்கு அதிகமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோபாலபுரம் சோதனை சாவடியில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று
கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் திவ்யா தகவலாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.