/indian-express-tamil/media/media_files/2025/05/04/ErKkUd3KTnIES7A1rdbf.jpg)
கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, "பஹல்காமில் 26 அப்பாவிப் பொதுமக்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது.
அதே நேரத்தில், முஸ்லிம் இளைஞர்கள் சிலர் துணிச்சலுடன் செயல்பட்டு, மீதமுள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்த செய்தி மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. இந்தச் செய்தி ஊடகங்களில் விரிவாக வெளியிடப்படவில்லை.
மத்திய அமைச்சரவையில் உள்ள சிலர் போர் தொடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால், போர் என்பது எளிதான விஷயம் அல்ல. போர் மூண்டால், இரு தரப்பிலும் அப்பாவி மக்கள் பெருமளவில் உயிரிழக்க நேரிடும்.
பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க ஒத்துழைக்க வேண்டும். சர்வதேச நாடுகளும் இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தீவிரவாதிகளின் பதுங்கும் இடங்களைக் கண்டு பிடித்து, அவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். போரை ஆதரிப்பவர்கள் அதன் விளைவுகளைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று கூறினார்.
நீட் தேர்வு விலக்கு குறித்து தி.மு.க வின் வாக்குறுதி என்னவாயிற்று என்ற கேள்விக்கு, அந்த வாக்குறுதியை நிறைவேற்ற தி.மு.க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று வைகோ பதில் அளித்தார்
தி.மு.கவின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. சொல்லாத வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்றி உள்ளது. திராவிட மாடல் ஆட்சி திருப்திகரமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்குமா ? என்ற கேள்விக்கு, எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. வி.பி.சிங், வாஜ்பாய், அத்வானி ஆகியோர் அமைச்சர் பதவி வழங்க முன் வந்த போதும் நான் அதை ஏற்கவில்லை. அமைச்சர் பதவியில் எனக்கு விருப்பமில்லை என்று வைகோ கூறினார்.
வருமான வரித்துறை சோதனைகளுக்கு தி.மு.க அஞ்சுவதாகக் கூறுவது குறித்த கேள்விக்கு, பயம் என்பது தி.மு.க வின் அகராதியில் இல்லை. வருமான வரித்துறை, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகள் மத்திய அரசால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், அந்த அமைப்புகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது. தி.மு.க"வினர் இதைப் பற்றி கவலைப்படவில்லை" என்று அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
பி.ரஹ்மான் -கோவை மாவட்டம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.