COVID-19 cases fall below 1000 mark in Tamil Nadu : தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிக அளவில் பரவிய நிலையில் திங்கள் கிழமை அன்று, பல மாதங்கள் கழித்து கொரோனா தொற்று எண்ணிக்கை 1000க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. திங்கள் கிழமை அன்று பதிவான கொரோனா தொற்று எண்ணிக்கை 990 ஆகும். இதுவரை தமிழகத்தில் 27,03,613 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று தமிழக பொது சுகாதார இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து சென்னை(111) மற்றும் கோவை (117) மாவட்டங்களில் 100க்கும் மேல் வழக்குகள் பதிவாகி வருகிறது. திருவிழா காலம் என்பதால் விதிமுறை மீறல்கள் அதிகமாக இருக்கும் எனவே பொதுமக்கள் அதிக எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
திங்கள் கிழமை அன்று மயிலாடுதுறை மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு தொற்று கூட பதிவாகவில்லை. 20 நபர்கள் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
கொரோனா தொற்று ஆரம்பித்த பிறகு மூன்றாவது முறையாக தொற்று எண்ணிக்கை 1000க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி அன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 957 ஆக பதிவானது. அப்போது தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,16,132 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதற்கு முன்பு 1000க்கும் குறைவாக மே மாதம் 30ம் தேதி அன்று 938 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. திங்கள் கிழமை அன்று 1,153 நபர்கள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரையில் 26,56,168 பேர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதுவரை கொரோனா தொற்றுக்கு 36,136 நபர்கள் பலியாகியுள்ளனர். நேற்றைய அறிக்கையின் படி 11,309 பேர் கொரோனா தொற்றுக்கு வீடுகள் அல்லது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் நிலை
தமிழகத்தில் 1.2 கோடி தகுதி வாய்ந்த நபர்கள் இன்னும் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாவில்லை என்றும் 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் இரண்டாம் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள கால தாமதம் செய்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
நடமாடும் கொரோனா தடுப்பூசி மையங்களை செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. கிராமங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு சுகாதாரப் பணியாளர்கள் அனுப்பப்பட்டு குறைந்தபட்சம் முதல் தடுப்பூசியாவது மக்களுக்கு செலுத்தபட்டிருப்பது உறுதி செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil