தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 10 பேர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்திருந்தது.
#TN: 17 new +ve cases for #Covid_19. #Madurai: 25 Y M at Rajaji Hosp. #Chennai:4 ppl via contact of USA return Pt at PvtHosp. 50 Y F,Broadway at RGGH.#Erode 10 M Pts travel history Delhi at IRTT,Perundurai. #Kulithalai :42 Y M at #Karur MC,Trav.Hist to Delhi tested at Thiruvarur
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 30, 2020
இதற்கிடையில், தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்த ஐந்து பேர் மரணமடைந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்தவ மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட செய்திகளை நாம் கேட்டு வந்திருப்போம்.
திடுக்கிடும் தகவல் என்னவென்றால், மேலே, குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கொரோனா வைரஸ் தொற்றுக்கும் அடிப்படையாய், மார்ச் 8, 9, 10 ஆகிய தேதிகளில் டெல்லி நிஜாமுதீனில் உள்ள ஒரு மசூதியில் தப்லிகி ஜமாஅத்தைச் சேர்ந்த இஸ்லாமிய போதகர்கள் நடத்திய மாநாடு காரணமாக இருக்குமோ? என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதுவரை, ஒட்டு மொத்தமாக இந்த மாநாட்டில் கலந்து கொண்ட 17 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில், 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
அந்த டெல்லி மாநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து மட்டும் 1500க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருக்கலாம் என்று தமிழக அரசு தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
இவர்களை தொடர்பு கொள்ளும் முயற்சியில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. ஈரோடு மட்டுமல்லாமல் திருச்சி,பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் இருந்தும் மக்கள் டெல்லி மாநாட்டிற்கு பயணித்திருக்கின்றனர். எனவே, உள்ளூர் அளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க,மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் தாமாக முன்வந்து டெஸ்ட் செய்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறார்கள்.
எஸ்.டி.பி.ஐ கட்சி அறிக்கை:
இந்நிலையில், கொரோனாவை குறிப்பிட்ட சமூகத்தோடு இணைத்து வெறுப்பை தூண்ட வேண்டாம் என்று எஸ்.டி.பி.ஐ கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்," கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது சம்மந்தமாக நேற்று (மார்ச்.30) தமிழக அரசு வெளியிட்டுள்ள பெயரில்லாத ஒரு அறிக்கையில், 'புதுடெல்லி மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 1500 நபர்கள் பங்கேற்பு' என்ற தலைப்பிட்டு ஒரு செய்தி கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் இஸ்லாமிய அமைப்பின் சார்பில் புதுடெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடந்த பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 1500 பேர் பங்கேற்றதாகவும், அதில் 985 நபர்களின் விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் மீதமுள்ளவர்களை அடையாளம் கண்டறியும் பணிகளில் தமிழக காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது உண்மையாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பிட்டு வெளிப்படையாக அறிக்கை வெளியிடுவது என்பது தவறான முன்மாதிரியாகும். இந்த அறிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கொரோனாவுக்கு எதிராக வேகமாக விரைவாக நடவடிக்கை எடுத்துவரும் தமிழக அரசு, இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை கூட வெளியிடவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பதை மட்டுமே தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், முதன்முறையாக ஒரு அமைப்பின் பெயரை குறிப்பிட்டு அதில் கலந்துகொண்ட முஸ்லிம்கள் தான் கொரோனாவை தமிழகத்தில் இறக்குமதி செய்கிறார்கள் என்ற தொனியில், பாதிக்கப்பட்டவர்களை அடையாளப்படுத்தி ஒரு அரசே செய்தி வழங்கியிருப்பது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழக முதல்வர் தான் சில நாட்களுக்கு முன் கொரோனா பற்றி வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் தற்போது தமிழக அரசே மக்களிடம் கொரோனா பீதியை ஏற்படுத்தி முஸ்லிம்களை குற்றவாளி கூண்டில் நிறுத்தியிருப்பது என்பது எந்த வகையில் நியாயம்?
ஏற்கனவே, கொரோனாவை முஸ்லிம்கள் தான் பரப்பி வருகின்றார்கள் என பல்வேறு பொய்யான அவதூறு பிரச்சாரங்கள் மூலம் தமிழக மக்களிடம் வெறுப்புணர்வை இந்துத்துவா சங்பரிவார சக்திகள் ஏற்படுத்திவரும் சூழலில், இதுபோன்ற செய்திகள் அந்த வெறுப்புணர்வை மேலும் தூண்டாதா? என்பது குறித்து தமிழக அரசு சிந்திக்காதது வருத்தமளிக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று என்பது உலகம் முழுவதும் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தோற்றம் மற்றும் பரவல் குறித்த எவ்வித காரணமும் முழுமையாக கண்டறியப்படவில்லை. வல்லரசு நாடுகள் கூட இதில் தப்பவில்லை. இன்னும் இதற்கு தடுப்பு மருந்து கூட கண்டறியப்படாத சூழலில் ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் வைரஸ் பரவலை தடுக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில், தமிழகத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பரவலுக்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்கிற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முனைவது கண்டிக்கத்தக்கது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு டெல்லியில் வெளிநாட்டினர் உட்பட பலரும் கலந்துகொண்ட மாநாட்டை காரணமாக கொள்வதாக இருந்தால், மிக சமீபத்தில் கோவை ஈஷா யோகா மையத்தில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் உட்பட லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட நிகழ்வையும் குறிப்பிடலாம். அதுபோன்ற வெளிநாட்டினர், வெளி மாநிலத்தவர் கலந்துகொண்ட பல்வேறு நிகழ்வுகளையும் குறிப்பிடலாம்.
ஆகவே, ஒரு வைரஸ் தொற்றை ஒரு குறிப்பிட்ட சமூகத்துடன் இணைத்து வெறுப்பினை விதைப்பது என்பது ஏற்றுக்கொள்ள தக்கதல்ல.
அவ்வாறு செய்வது தொற்று நோய் சட்டத்தின் படியும் நடவடிக்கைக்கு உரியது. எனவே தமிழக முதல்வர் உடனடியாக இந்த அறிக்கையை வாபஸ் பெற்று மறுப்பு வெளியிட வேண்டும். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
தமிழக அரசின் சுகாதாரத்துறை உள்ளிட்ட எந்த ஒரு துறையின் பெயரையும் குறிப்பிடாமல் வெளியான இந்த அறிக்கையை சில ஊடகங்கள் வேகமாக ஒளிபரப்பி குறிப்பிட்ட சமூக மக்களை குற்றவாளிகளாக காட்ட முனைந்தது ஏற்றுக்கொள்ளக் கூடிய செயல் அல்ல. ஊடகங்களும் தங்களது சமூக பொறுப்பினை உணர்ந்து இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதில் கவனமுடன் செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.