தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும், தினசரி பாதிப்புகள் பதிவாகி கொண்டே இருக்கின்றன. இருப்பினும். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் அவரது மனைவி மோகனாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து,கி வீரமணியும், அவரது மனைவியும் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததை அடுத்து பரிசோதனை மேற்கொண்டதில், இருவருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கி.வீரமணியும், அவரது மனைவி மோகனா இருவருக்கும் சிறிய அளவில் கொரோனா தொற்று தென்பட்ட காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சில நாட்களில் இருவரும் வீடு திரும்புவர். ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்படுகின்றன" என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று, மீண்டும் பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட எம்.பி ரவிகுமார், ஆசிரியர் அய்யாவுக்கு மீண்டும் எடுக்கப்பட்ட டெஸ்ட்டில் கொரோனா இல்லை எனத் தெரியவந்துள்ளது.
அம்மாவுக்கு மட்டும் பாஸிட்டிவ் வந்துள்ளது என கவிஞர் கலி.பூங்குன்றன் தெரிவித்தார். இருவரும் நலமாக வீடு திரும்ப வாழ்த்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil