/indian-express-tamil/media/media_files/2025/01/08/9ozBPl4BnhnBbbXQz1FO.jpg)
Ma Subramanian
தமிழகத்தில் தற்போது 38 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், ”கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து பரவி வருகிறது. வதந்திதான் பெரிய நோய். கொரோனா குறித்து யார் வேண்டுமானாலும் தகவல் பரப்பலாம். பதற்றத்தை ஏற்படுத்தாமல் மக்களிடம் முன்னெச்சரிக்கையை ஏற்படுத்துவதே அவசியம்.
தமிழகத்தில் தற்போது 38 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வகையிலான தொற்று பரவி வருகிறது. இதனால், யாரும் பதற்றமடையத் தேவையில்லை. பெரிய பாதிப்பு எதுவும் இதுவரை ஏற்படவில்லை.
நுரையீரல், இதயம் போன்ற பாதிப்புக்குள்ளானவர்கள் முகக்கவசம் அணிவது நல்லது. தொற்று பாதிக்கப்பட்டவர்களின் 17 மாதிரிகள் புனே ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கை கழுவுதல், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது நல்லது. பொதுமக்கள் அதிக அளவில் கூடும் பகுதிகளுக்குச் செல்லும்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது நல்லது. ஆனால் இதில் எதுவுமே கட்டாயமில்லை. கடைப்பிடித்தால் நல்லதுதான்.
கொரோனா பரவலை சமாளிக்க தமிழகத்தில் போதுமான மருத்துவக் கட்டமைப்பு உள்ளது. தனி வார்டுகளும் தயாராக உள்ளன. கொரோனா பரவலைக் கண்டு பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். இந்தியாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் எடுத்துக் கொண்டாலும் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை.
சென்னையில் கொரோனா பாதிக்கப்பட் ஒருவர் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர் கொரோனாவால் இறக்கவில்லை. ஏற்கனவே உடலில் இருந்த பிரச்சனைகளால் இறந்திருக்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கப்படும்போது, கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.
அதில்தான் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சம்பந்தப்பட்டவருக்கு நீண்டநாட்களாக கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு பிரச்சனை இருந்துள்ளது என்று, அமைச்சர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.