அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு விதிகளை பின்பற்றாத அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக, மார்ச் 25 முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக, தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. மக்கள் வீடுகளுக்கு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் ஆகிய கொரோனா தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுவிகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்தது. இதையடுத்து, அதிமுகவில் பொதுக்குழு செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு, அக்டோபர் 7ம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக முதல்வர் பழனிசாமியை அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், கட்சியின் உயர் மட்டத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவொற்றியூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணியன், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு விதிகளை பின்பற்றாத அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் தளர்த்தப்பட்ட பின்னர், முகக் கவசம் அணிதல், தனிமனித விலகல் ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், கடந்த அக்டோபர் 7ம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்த நிகழ்ச்சி நடந்தது. அதையடுத்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளின் போது அதிமுகவினர், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றவில்லை.
அமைச்சர்களும், எம்எல் ஏக்களும், கொரோனா விதிகளை பின்பற்றாமல் கட்சியினரை ஒன்று கூட அனுமதித்துள்ளனர். எனவே விதிகளை பின்பற்றி, உதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளதால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர், மனுதாரர் குறிப்பிட்டுள்ள நாளில் அனைத்து விதிகளும் பின்பற்றப்பட்டதாகவும் இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள், மனுதாரர் தாக்கல் செய்திருந்த புகைப்படங்களில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தாலும், தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்கள். மேலும், இந்த மனு தொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி சுகாதார அதிகாரி மற்றும் பேரிடர் மேலாண்மை மைய தலைவர் ஆகியோர் வரும் ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”