தெற்கு மண்டல ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாதுக்கப்பு பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு, மருத்துவ பரிசோதனையில் ஈடுபடுமாறு சென்னை ரயில்வே பாதுகாப்பு படை மூத்த ஆணையர் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக, இதுதொடர்பான ஒரு விரிவான அறிக்கையை, தமிழக சுகாதாரத் துறைக்கு தென்னக ரயில்வே அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம், டெல்லி நிசாமுதீன் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட அதிகமான பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களில் ஏராளமானோர் மார்ச் 17ம் தேதியன்று நிசாமுதீன்-சென்னை துரோன்டோ எக்ஸ்பிரஸில் உள்ள எஸ் 1, எஸ் 2, எஸ் 5 , எஸ் 6 கோச்சுகளில், பயணம் செய்திருக்கின்றனர். மேலும், மார்ச் 18ம் தேதி விஜயவாடா- சென்னை இடையே ஓடும் ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் பொது கோச்சுகளிலும் அவர்கள் பயணம் செய்திருக்கின்றனர்.

டெல்லி அரசு, மற்றும் தெலுங்கான, ஆந்திர பிரேதேசம் போன்ற மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில், தென் மாநிலங்களை இணைக்கும் 11 ரயில்களில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் பயணித்திருக்கலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவற்றில்,
ஜம்மு தாவி - கன்னியாகுமரி ஹிம்சகர் எக்ஸ்பிரஸ்,டேராடூன் - மதுரை இரு வார எக்ஸ்பிரஸ்,
புதுடெல்லி - சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்,
புதுடெல்லி - திருவனந்தபுரம் கேரள எக்ஸ்பிரஸ்,
ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா - சென்னை அந்தமான் எக்ஸ்பிரஸ்,
புதுடெல்லி - எர்ணாகுளம் மில்லினம் எக்ஸ்பிரஸ்,
ஹஜ்ரத் நிஜாமுதீன் - சென்னை ராஜ்தானி எக்ஸ்பிரஸ்,
ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ்,
நிஜாமுதீன் - திருவனந்தபுரம் ஸ்வர்ணா ஜெயந்தி எக்ஸ்பிரஸ்,
நிஜாமுதீன் - கோவை கொங்கு எக்ஸ்பிரஸ்
புது தில்லி - சென்னை கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ்.
இந்த 11 ரயில்களில் பணியாற்றிய ரயில்வே ஊழியர்கள் அனைவரும் தங்களை உடனடியாக தனிமைப்படுத்திக் கொண்டு, மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று ரயில்வே பாதுகாப்பு படை மூத்த ஆணையர், சென்னை ரயில்வே பிரிவுக்கு அனுப்பிய உள் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.