தமிழகத்தில் 18 முதல் 44 வயதுடைய நபர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்கப்படும் என்றும், அதில் ஆட்டோ டிரைவர்கள், ஆலை தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்.
டி.எம்.எஸ்ஸில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர், 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட, சுகாதாரத்துறை சார்பில் ரூ.46 கோடி செலுத்தி, அதில் 9 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளது. தமிழகத்திற்கு இதுவரை மத்திய அரசிடமிருந்து 78 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளது. அதில் 69 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
உலகளாவிய டெண்டர் மூலம் 3.50 கோடி டோஸ் தடுப்பூசி கொள்முதல் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டார். தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் முடிவதற்குள் ஆர்டர் செய்த தடுப்பூசிகள் கிடைத்துவிடும். தமிழகத்தில் 5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டால் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.
உலகளாவிய டெண்டர் மூலம், ஸ்பூட்னிக் உட்பட இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளையும் வாங்க முடியும். மத்திய அரசு ஸ்பூட்னிக் தடுப்பூசியை மாநிலத்திற்கு ஒதுக்கினால் அதுவும் பயன்பாட்டுக்கு வரும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா பாதித்த ஒருவரிடம் இருந்து 400 பேர் வரை பாதிக்கப்படாலம். அதனால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். ஊரடங்கு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"