Corona cases in tamilnadu: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை கொரோனா பாதித்தோரின் ஒரு நாள் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை கடந்துள்ளது. ஒரே நாளில் 5,441 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 5000 ஐ கடந்து 5,489 ஆக இருந்தது. பிறகு அக்டோபர் 12ஆம் தேதிக்கு பிறகு 5000க்கு கீழ் பதிவாக தொடங்கியது.
கொரோனா முதல் அலையை விட தற்போது தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னையில் ஒரே நாளில் மட்டும் 1,752 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னையில் கொரோனா மொத்த பாதிப்பு 2,61,072 ஆகவும் உயிரிழப்பு 4,302 ஆகவும் உள்ளது.செங்கல்பட்டு மற்றும் கோயம்புத்தூரில் 400க்கும் மேல் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. செங்கல்பட்டில் 465 பேருக்கும், கோயம்புத்தூரில் 473 பேருக்கும், திருச்சியில் 213 பேருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் 100க்கும் மேல் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. திருவள்ளுர்-195, காஞ்சிபுரம் -153, திருப்பூர் -148, கடலூர் -148, தஞ்சாவூர் -144, மதுரை -142 ,சேலம் -126, நாகப்பட்டினம் -124 ,திருநெல்வேலி -114, வேலூர் -109 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 32 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனாபாதித்தோர் மொத்த எண்ணிக்கை 9,20,827 ஆக உள்ளது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் மேலும் 23 பேர் உயிரிழந்ததால் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 12, 863ஆக உள்ளது.
திருவள்ளூரை சேர்ந்த 44 வயதுடை நபர் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏப்ரல் 8 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டரை மணி நேரத்தில் கடுமையான சுவாச கோளாறு மற்றும் கொரோனா காரணமாக உயிரிழந்தார். அவருக்கு ஏப்ரல் 7 ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்ட்டிருந்தது. விருதுநகரைச் சேர்ந்த 42 வயது நபர் ஏப்ரல் 6 ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோவிட் -19 நிமோனியா மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக அவர் மறுநாள் இறந்தார். 50 வயதிற்குட்பட்ட ஐந்து நபர்கள் நோய்தொற்றால் இறந்துள்ளனர்..
தற்போது கொரோனா பாதித்து சென்னையில் 12, 861 பேரும், கோயம்புத்தூரில் 3,389 பேரும், செங்கல்பட்டில் 3,083 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதித்து இதுரை 8,74,305 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 88,135 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 2,03,47,042 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுரை 1,18,271 பேருக்கு கொரேனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது .45 முதல் 60 வயதுள்ள இணைநோய் உள்ளவர்கள் 61,922 பேருக்கும், 46,407 முதியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது
தமிழகத்தில் 2,956 சுகாதார பணியாளர்களுக்கும், 5,844 முன்கள பணியாளர்களுக்கும், 45 முதல் 59 வயதுடைய இணைநோய் உள்ள 53,385 பேருக்கும், 40 ,671 முதியோர்களுக்கும் கோவிட்ஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.அதேபோல் 662 சுகாதார பணியாளர்கள், 480 முன்கள பணியாளர்கள், இணைநோய் உள்ள 8,537 பேர், 5,736 முதியோர்களுக்கு கோவக்சின் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“