சென்னை மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள கோ சம்ரக்ஷணா கோ சாலையில் மாட்டுப் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி பங்கேற்றார்.
விழாவில் பேசிய அவர், "எனது அப்பாவுக்கு காய்ச்சல் அடித்தது. அப்போது ஒரு சந்நியாசி வந்தார். அந்த சந்நியாசியின் பெயர் எனக்கு மறந்து விட்டது. சந்நியாசி கோமியத்தை குடிக்க சொன்னார். கோமியம் குடித்த உடன் 15 நிமிடத்தில் அவருக்கு ஜீரம் போய்விட்டது.
மேலும் பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு பிரச்சனைகளை எதிர்க்க கோமியம் சிறந்த மருந்து" என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எம்.பி கார்த்தி சிதம்பரம், தமிழ்நாடு மாணவர் கழகம் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மாணவர் கழக அறிக்கையில், கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென அறிவியலுக்கு எதிரான, அடிப்படை ஆதாரங்கள் இல்லாத பிற்போக்கு கருத்தை காமகோடி கூறியுள்ளார் எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எம்.பி கார்த்தி சிதம்பரம் X பதிவில், ஐ.ஐ.டி இயக்குநரின் போலி அறிவியல் கருத்து பொருத்தமற்றது எனப் பதிவிட்டுள்ளார்.