கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்யப்படுகிற COWIN இணையதளத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில் மேலும் 9 மொழிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் தமிழ்மொழி இல்லாததால் தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன் பதிவு செய்வதற்கு ஒன்றிய அரசு COWIN என்ற இணையதளத்தை தொடங்கியது. இந்த இணையதளத்தில் பெயர் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்வதற்கு ஆங்கிலம், இந்தி ஆகிய 2 மொழிகள் மட்டுமே பயன்பாட்டுக்காக கொடுக்கப்பட்டிருந்தது. ஆங்கிலம், இந்தி மொழிகள் பலருக்கும் தெரியாது என்பதால் தடுப்பூசி முன் பதிவு செய்வதற்கு மாநில மொழிகளையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு மேலும் 9 மொழிகளை இணைத்தது. அதில், மராத்தி, மலையாளம், பஞ்சாபி, குஜராத்தி, அஸ்ஸாமி, வங்காளம், கன்னடம், ஒரியா ஆகிய மொழிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழ் மொழி இடம் பெறவில்லை. COWIN இணையதளத்தில் பதிவு செய்வதற்கு பயன்படுத்தப்படும் மொழிகளில் தமிழ் மொழி இல்லாததால் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசன், “கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யும் இணையதளமான COWIN ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருந்த நிலையில் இன்று புதிதாக 9 மொழிகளில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப் பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி முன்பதிவுக்கான கோவின் இணையதளத்தில் தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்ததோடு தமிழ் மொழி இடம்பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது இதனைத்தொடர்ந்து, கோவின் இணையதளத்தில் 2 நாட்களில் தமிழும் இடம்பெறும் என ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"