/indian-express-tamil/media/media_files/2024/12/18/yAnW8SbwDk3X1K37qazA.jpg)
"ஒரே நாடு ஒரே தேர்தலால் மாநிலங்களின் உரிமை ஒருபோதும் பறிபோகது. ஒன்றிய அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள்." என்று மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நமது பாரத தேசத்தில் காந்தி, நேதாஜிக்கு பிறகு மிகப்பெரிதாக மதிக்கக்கூடிய தலைவராக அம்பேத்கர் உள்ளார். அவரது புகழ் என்றைக்கும் நிலைத்திருக்கும். அவர் தந்த அரசியலமைப்பு சட்டத்தால் தான். இந்திரா காந்தியால் கூட ஜனநாயகத்தை அசைத்து பார்க்க முடியவில்லை. அந்த மகத்தான மனிதரின் புகழுக்கு ஒருபோதும் கலங்கத்தை ஏற்படுத்தக் கூடாது.
ஒரே நாடு ஒரே தேர்தலால் மாநிலங்களின் உரிமை ஒருபோதும் பறிபோகது. ஒன்றிய அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள். அடிக்கடி குழந்தை அன்னையின் நலத்திற்கு எப்படி கெடோ, அப்படி அடிக்கடி தேர்தல் என்பது சமுதாயம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு கெடு விளைவிக்கும். அதனால் தேர்தல் என்பது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது தான் முன்னேற்றத்திற்கான வழியாக இருக்கும்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான பாஷாவின் இறுதி ஊர்வலத்தில் இரண்டு அரசியல் தலைவர்கள் (சீமான், தனியரசு) எதொவொரு பெரிய தியாகிக்கு மரியாதை தருவது போல கலந்து கொண்டிருக்கிறார்கள். அந்த இரண்டு தலைவர்களையும் தமிழ் மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்.
இது அரசியல் தலைமைக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். யார் தவறு செய்தாலும் தவறு தான். வெடிகுண்டுகளால் சாதாரண குழந்தைகளை கூட கொன்று குவித்த ஒருவன், தியாகியா? அவனது இறப்பை கொண்டாட முடியுமா? இது எல்லாம் பெரிய தவறு. இதற்கு எதிராக கருப்பு தின பேரணி நடத்துபவர்களை பாராட்டுகிறேன்.
சாதாரண மக்களை கொன்று குவித்தவருக்கு எதிராக இவர்கள் ஒருவராவது குரல் கொடுக்கிறார்களே என்பதை நினைத்து பெருமிதம் அடைகிறேன். எல்லா இடங்களிலும் போதை பழக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு எதிராக மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் போது
ஆதரவு கரம் நீட்ட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.