கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (மார்ச் 9) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "தமிழகத்தில், தமிழ் மொழி வாயிலாக தான் கற்க வேண்டும் என்பதை, புதிய தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. தமிழகத்தில் தமிழில் கல்வி கற்பது அனேகமான இடங்களில் மறைந்து வருகிறது. அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றால் புதிய தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும்.
மும்மொழிக் கொள்கை என்று வரும் போது அதில் மூன்றாவது மொழியாக, எந்த மொழியில் வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம். புதிய தேசிய கல்விக் கொள்கையில் எந்த மொழியும் திணிக்கப்படவில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழகத்தை பொறுத்த வரை அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது.
இரண்டாவது, தொகுதி வரையறை என்பது தமிழகத்தில் இருக்கிற 39 தொகுதிகளுக்கு குறைவாக அந்த வரைமுறையும் இருக்காது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதனால் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி அரசியல் செய்வது தமிழகத்தில் வாடிக்கையாக இருக்கிறது. அந்த வகையில் இதுவும் ஒன்று. புதிய தேசிய கல்விக் கொள்கை என்று எடுத்துக் கொண்டால், அது தமிழகத்திற்கு மட்டும் வருவது இல்லை. அனைத்து மாநிலத்திற்கும் வரக் கூடிய ஒன்று.
பொதுவாகவே பாலியல் துன்புறுத்தல் என்பது தமிழகத்தில் அதிகமாக உள்ளது. இதற்கு அடிப்படையான காரணம் போதை பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாக இருப்பது. அதனால் கஞ்சாவுக்கு எதிராக தமிழக அரசு மிகக் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். நான் பாண்டிச்சேரியின் லெஃப்டினன்ட் கவர்னராக இருந்த நேரத்தில், தமிழகத்தில் இருந்து தான் பாண்டிச்சேரிக்கு நிறைய கஞ்சா கடத்தப்பட்டது. அதை தடுப்பதற்கான முயற்சிகளை எடுத்தோம். தமிழக அரசு கடுமையான நடவடிக்கையின் மூலம் போதை பொருள் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும்" எனக் கூறினார்.
செய்தி - பி.ரஹ்மான்