/indian-express-tamil/media/media_files/2025/06/01/Sq41Mew4gurHr7nmunNX.jpg)
கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (ஜூன் 1) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழகத்தில் சில அரசியல் தலைவர்கள் தேச விரோத சக்திகளை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டினார். நக்சலைட்டுகளால் முன்னாள் மந்திரிகள் கொல்லப்பட்டது நினைவில் இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், 'அர்பன் நக்சலைட்' சிந்தனை எங்கும் பரவி வருவதாகவும், இது தேச நலனுக்கு எதிரானது என்றும் தெரிவித்தார். தீவிரவாதம் எந்த உருவில் வந்தாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மத்திய அரசு தமிழகத்திற்கு எவ்வளவு நிதி அளித்தாலும், அதைப் போற்றுவதற்கு சிலருக்கு மனம் இல்லை என்று சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழக அரசு, மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் என்றும், தமிழக ஆளுநர் நேர்மையானவர் என்றும், தனது கடமைகளை சிறப்பாகச் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார். அதே சமயம், மாநில அரசு அவருக்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நாடெங்கும் தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதாக ஆளுநர் தெரிவித்தார். டாஸ்மாக் பிரச்சனை அதிகரித்து வருவது வருத்தத்திற்குரியது என்று குறிப்பிட்ட அவர், அதைவிட கஞ்சா பரவல் அதிகமாகி வருவதாகவும், தமிழக அரசு கஞ்சாவை ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மத்திய அரசு, மாநில அரசுக்கு தரும் நிதி குறித்து உச்ச நீதிமன்றம் இரு வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
'ஒன்றிய அரசு' என்று கூறுவதே தவறு என்று கூறிய சி.பி. ராதாகிருஷ்ணன், "மத்தியில் இருப்பது ஒன்றிய அரசு என்றால் மாநிலத்தில் இருப்பது பஞ்சாயத்து அரசா?" என்று கேள்வி எழுப்பினார். இதுவரை இல்லாத ஒரு மொழிபெயர்ப்பை தற்போது சிலர் தருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கமல்ஹாசன் எப்பொழுதாவது ஒன்றை ஒழுங்காக கூறி இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பிய அவர், "திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழிப்பது தான் என்னுடைய வேலை" என்று ஒரு இயக்கத்தை ஆரம்பித்ததாகவும், ஆனால் தற்போது தி.மு.க-வுடன் இருப்பது தான் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறுவதாகவும் சாடினார்.
கமல்ஹாசனின் கன்னட மொழி விவகாரம் குறித்தான கேள்விக்கு பதிலளித்த சி.பி. ராதாகிருஷ்ணன், பதவிக்காக கமல்ஹாசன் இவ்வாறு கூறி இருப்பதாகவும், கமல்ஹாசன் தனக்கு பதவி வேண்டும் என்று நினைக்கும் மனிதராக இருப்பதாகவும் சாடினார். அதேபோன்று, சமஸ்கிருத மொழியில் இருந்துதான் தமிழ் வந்தது என்று கூறினால் ஏற்றுக்கொள்வோமா? எனவே பேசும்போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.