/tamil-ie/media/media_files/uploads/2023/03/arrest-5.jpg)
நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கிய தகவலை மறைத்த ஓய்வுபெற்ற சார் பதிவாளர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரநாராயணன் என்பவர் புதுச்சேரியில் உள்ள உறவினர் மூலம் கடந்த 2012ஆம் ஆண்டு கிருமாம்பாக்கத்தில் ரூ.7½ லட்சம் மதிப்பில் 2 மனைகள் வாங்கி பாகூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் வாங்கிய மனைகள் ஏலம் விடப்பட உள்ளதாக வங்கி வெளியிட்ட அறிவிப்பை கண்டு சங்கரநாரயணன் அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றி விசாரித்தபோது, அவர் வாங்கிய நிலத்தை தனியார் நர்சிங் கல்லூரி தாளாளர் மனோகரன், நிர்வாகிகள் குமரவேல், சண்முகம், சுந்தரராமன், அமுதா, செல்வி உள்பட 7 பேர் நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து வாங்கிய ரூ.7 கோடியை திரும்ப செலுத்தாததால் ஏலம் அறிவிப்பு வெளியானது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனியார் கல்லூரி நிர்வாகிகள் மனோகரன், குமரவேல் உள்பட 7 பேர் மீது கடந்த 2018-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால் மேல்நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வில்லங்கம் சான்றிதழில் நிலம் அடமானம் வைத்து கடன் வாங்கிய தகவலை மறைத்து மனை பதிவு செய்து கொடுத்த அப்போதைய பாகூர் சார்-பதிவாளர் ஹரிகிருஷ்ணன் மோசடிக்கு உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஓய்வுபெற்ற ஹரிகிருஷ்ணன் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.