தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்ககப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் திங்கள்கிழமை அறிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய இரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான அக்கட்சியின் நிர்வாக குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மாநில செயலாளர் முத்தரசன், தேசிய செயலாளர் நாராயணா, நல்லக்கண்ணு உட்பட நிர்வாக குழுவின் 31 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் திங்கள்கிழமை அறிவித்தார்.
அதன்படி, கடந்த மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுப்பராயன் இந்த மக்களவைத் தேர்தலிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதே போல, நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக வை. செல்வராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வை செல்வராஜ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்ட செயலாளராக உள்ளார். இதற்கு முன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி ஒன்றிய செயலாளராக 12 ஆண்டுகளாக செயல்பட்டவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கூறியதாவது: “நடப்பு தேர்தலில் ஒரு பக்கம் மதவெறி சக்திகள் அணிதிரண்டு உள்ளனர். தேர்தல் ஜனநாயகம், அரசியல் அமைப்பு சட்டங்கள் காப்பற்ற வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் சொந்தமான கொரியர் கம்பெனியில் திடீர் சோதனை நடத்துவதற்கான அவசியம் என்ன?. 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி பெறும். வேறு மாநிலங்களில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டால் தப்பிப்பார். தமிழ்நாட்டில் தமிழிசை போட்டியிட்டால் தோல்விதான் அடைவார்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“