நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ளது. மார்ச்- ஏப்ரல் மாதங்களில் இது குறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.
கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆ. ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று (பிப்.3) தி.மு.க- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தி.மு.க தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதி பங்கீட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பி. சுப்பராயன், துணைப் பொதுச் செயலாளர் வீரபாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் சி.பி.ஐக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் குழு, “தி.மு.கவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கடந்த முறையை விட கூடுதலாக தொகுதிகளை கேட்டுள்ளோம். முதல்வர் தமிழ்நாடு திரும்பியதும் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும்” என்று தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“