cpi leader nallakannu : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சென்னை தியாகராய நகரிலுள்ள அரசு குடியிருப்பு வாடகை வீட்டைவிட்டு வெளியேறி, கே.கே. நகரில் குடியேறியுள்ளார்.
அரசியல்வாதிகளிலேயே தன் எளிமையால் அனைத்து தரப்பு மக்களாலும் நேசிக்கப்படுபவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. இலவசம் என்றாலே அறவே புறகணிக்கும் நல்ல கண்ணுவுக்கு அரசு சார்பில் குடியிருக்க கடந்த 2007-ஆம் ஆண்டு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
Read More: நல்லகண்ணுவுக்காக எழுந்த குரல்கள்: பொதுவாழ்வுக்கு கிடைத்த அங்கீகாரம்
அந்த வீட்டை அரசு இலவசமாக தந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளதாக நல்லகண்ணு இத்தனை நாள் வரை அந்த வீட்டிற்கு வாடகை செலுத்தி வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக வாழ்ந்த வீட்டை விட்டு நல்லகண்ணு திடீரென்று வெளியேறி சென்னை கே.கே நகரில் வாடகை வீட்டிற்கு இடம்பெயர்ந்துள்ளார்.
நல்லகண்னு ஏன் திடீரென்று வீட்டை மாற்றினார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சென்னை தியாகராய நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு தான் நல்லகண்ணுவும் வசித்து வந்தார். இந்நிலையில் அந்த இடத்தில் புதிய திட்டம் வருவதால் குடியிருப்பு வாசிகள் அனைவருக்கும் அரசு சார்பில் நோட்டீஸ் தரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டு மற்றவர்கள் வெளியேறியதுபோல் நல்லகண்ணுவும் வெளியேறியுள்ளார்.
நல்லகண்ணு நினைத்திருந்தால் அரசிடம் மாற்று வீடு கேட்டிருக்க முடியும். ஆனால் அதை விரும்பாத அவர், மற்ற குடியிருப்புகாரர்கள் வெளியேறுவது போலவே தானும் தனக்கு உரிய பொருட்களை எடுத்துக் கொண்டு சத்தமில்லாமல் அங்கிருந்து சென்றார்.
இந்நிலையில், மூத்த அரசியல் தலைவர் நல்லக்கண்ணுக்கு தமிழக அரசு வீடு வழங்கி உத்தரவிட வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுக் குறித்த அறிக்கையில் பழ.நெடுமாறன் கூறியிருப்பதாவது, “ சென்னை தியாகராயநகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான குடியிருப்பில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த தமிழகத்தின் முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணு அவர்களை உடனடியாக காலி செய்யும்படி ஆணையிடப்பட்டு அவரும் வேறு இடத்திற்கு குடி பெயர்ந்திருக்கிறார்.
94 வயதான முதிர்ந்த தலைவரை அவருடைய தியாகம் தொண்டு ஆகியவற்றை எண்ணிப் பார்க்காமல் அவரை வெளியேற்றி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழக முதலமைச்சர் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு அவருக்கு அரசு வீடு ஒன்றினை உடனடியாக வழங்க முன் வருமாறு வேண்டிக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.