Advertisment

ஈஷா யோகா மையம் மீது நடவடிக்கை கோரி 23-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்பாட்டம்; முத்தரசன் அறிவிப்பு

ஈஷா யோகா மையம், ஜக்கி வாசுதேவ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் அணி சார்பில் வருகின்ற 23-ம் தேதி ஆர்பாட்டம் நடத்தப்படும்; கோவையில் முத்தரசன் பேட்டி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mutharasan kovai

கோவை ஈஷா யோகா மையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு  எதிராக நடக்கும் செயல்களை கண்டித்தும், ஈஷா நிறுவனர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வரும் 23 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் அணி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Advertisment

கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய முத்தரசன், “ஈஷா அறக்கட்டளை, யோகா என்கிற பெயரில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த யோகா மையத்தில் பல்வேறு விதமான தவறுகள், பெண்களுக்கு எதிரான தவறுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. சத்குரு வாசுதேவ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது. 

பெண்கள் யோகா பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு மூளை சலவை செய்யப்படுகிறார்கள். குடும்பத்தினரையே அந்த பெண்கள் சந்திக்க மறுக்கிறார்கள். அண்மையில் லதா, கீதா என்ற பெண்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. பெண்களுக்கு அங்கு மொட்டை அடிக்கப்படுகிறது. வாசுதேவ் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் ஊரார் வீட்டு மகள்கள் மொட்டை அடிக்கப்படுகிறார்கள். இது குறித்து விசாரணை நடத்த நீதிமன்ற கேட்டுள்ளது.

அங்கு ஆதிவாசிகள், பழங்குடி மக்கள் நிலங்கள் பறிக்கப்பட்டு ஈஷா மையத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக அறிக்கை வருகிறது. இங்கு பிரதமர், குடியரசு தலைவர், பிற மாநில முதலமைச்சர்கள், உயர் அரசு அதிகாரிகள் ஆகியோர் எல்லாம் வருகிறார்கள். இவர்கள் எல்லாம் வருவதால் ஈஷா மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தடுக்கப்படுகிறது. வெளி நாட்டில் இருப்பவர்கள் அங்கு அனுமதி பெற்று தங்கி உள்ளார்களா என்பது பற்றி தெரியாது.

யோகா மையத்தில் தகன மேடை இருப்பதற்கு என்ன அவசியம்?, அரசு அனுமதி உள்ளதா? ஈஷா யோகா மையம் நீர்வழி பாதைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தகவல்கள் வருகிறது. வன நிலத்தை ஏழை மக்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் உடனே வெளியேற்றப்படுகிறார்கள். அப்போது ஈஷாவிற்கு மட்டும் யார் அனுமதி கொடுத்தது? ஈஷா மீது பொது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அங்குள்ள பெண் குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈஷா நிறுவனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி 23ம் தேதி கோவை சிவானந்தா காலனி பகுதியில் பெரும் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

வன விலங்குகளை பாதுகாக்க வேட்டை தடுப்பு காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களது பணி வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுத்து பாதுகாப்பது என்பதாகும். இதற்கான பயிற்சி பெற்றவர்கள், பழங்குடி மக்கள் தான் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர். இதனை தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அது உண்மையெனில் அரசு கைவிட வேண்டும்.

ஈஷா நிறுவனரை பாதுக்காப்பது ஒன்றிய அரசு தான். மணிப்பூரை பார்க்க பிரதமர் செல்லவில்லை. ஆனால் ஈஷா வருகிறார். ஈஷாவிற்கும் எங்களுக்கும் பகை கிடையாது. அங்கு நடக்கும் செயல்களை தான் கண்டிக்கிறோம். ஆளுநர் ரவி பற்றி என்ன சொல்வது என தெரியவில்லை. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவர் ஆளுநராக இருக்கிறார். திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்தாற்போல் இதழில் அச்சிடுகிறார். வள்ளுவரை சிறுமை படுத்துவது போல் செயல்படுகிறார்,” என்று கூறினார்.

பின்னர் மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பான கேள்விக்கு விவசாயிகளிடம் இருந்து குறைந்த மதிப்பில் நிலங்கள் பறிக்கப்படுகிறது, கோடிக்கணக்கான செலவில் மக்கள் பணத்தில் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. விமான நிலையம் விரிவாக்கம் என்பது முக்கியம் தான், ஆனால் விவசாயிகளையும், விவசாய நிலத்தையும் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என்று முத்தரசன் கூறினார்.

சூலூர் பாரத் பெட்ரோலியம் எண்ணெய் குழாய் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, எந்த மாவட்டமாக இருந்தாலும் விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டும். விவசாயம் அழிந்தால் வேறு எதுவும் இல்லை. நம் நாடு விவசாயம் சார்ந்த நாடு. வளர்ச்சி கண்டிப்பாக தேவை, அதே சமயம் விவசாயம் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும். விவசாய நிலத்தை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கை இருந்தாலும் இந்திய கம்யூனிஸ்ட் கண்டிக்கும் என்று முத்தரசன் கூறினார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன் கூறியது குறித்து திருமாவளவன் பதிலளித்தது தொடர்பான கேள்விக்கு, அவரிடம் தான் கேட்க வேண்டும். தமிழக அரசாங்கமும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இரு மொழி கொள்கையில் தான் உறுதியாக உள்ளது. சொத்து வரி, மின்கட்டண வரியை உயர்த்த வேண்டும் என்று கூறியது ஒன்றிய அரசாங்கம் தான் என முத்தரசன் தெரிவித்தார்.

பி.ரஹ்மான், கோவை 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Muththarasan isha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment