Advertisment

நிவாரண நிதி தராத மோடிக்கு, தமிழகத்தில் வாக்கு கேட்க உரிமை இல்லை - முத்தரசன்

தேர்தல் ஆணையர் அருண் கோயல், ஏன் ராஜினாமா செய்தார்? என்பதை நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும்; கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேட்டி

author-image
WebDesk
New Update
CPI Muttharasan

தேர்தல் ஆணையர் அருண் கோயல், ஏன் ராஜினாமா செய்தார்? என்பதை நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும்; கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேட்டி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய முத்தரசன் "இன்னும் சில தினங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படவும் ஜனநாயகம் காப்பாற்றப்படவும் அரசியலமைப்புச் சட்டம் காப்பாற்றப்படவும் வாய்ப்புகள் ஏற்படும். அரசியல் அமைப்புச் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்புகள் பாதுகாக்கப்படவும் இன்றைக்கு இருக்கக்கூடிய மோடி தலைமையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும், இல்லை என்று சொன்னால், நாடு பேராபத்தை சந்திக்கும்.

Advertisment

இந்தியா கூட்டணி ஏற்பட தமிழ்நாடு தான் முக்கிய காரணம் குறிப்பாக மு.க ஸ்டாலின் அவர்கள். தி.மு.க கூட்டணியில் அங்கம் பெற்று இருக்கிற கட்சிகள் உடனான தொகுதி பங்கோடு நேற்றுடன் முடிவடைந்து இருக்கிறது. இந்திய அளவிலும் நல்ல கூட்டணி உருவாகி இருக்கிறது. பீகார், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் தொகுதி உடன்பாடுகள் நல்ல முறையில் ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலை இந்தியா கூட்டணி கொள்கை ரீதியாக எதிர்கொள்ளும் பாரதிய ஜனதா கட்சியுடைய அராஜகங்களுக்கு இந்த தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும்.

தேர்தல் ஆணையத்தில் அங்கம் வகித்த அருண் கோயல் என்பவர் திடீரென்று ராஜினாமா செய்திருக்கிறார் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது அவர் ஏன் ராஜினாமா செய்தார்? ராஜினாமா ஏன் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது? என்பது குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை. மூன்று பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒருவர் ராஜினாமா செய்து விட்டார். தற்போது அருண் கோயலும் ராஜினாமா செய்திருக்கிறார், தற்போது தலைவர் மட்டுமே மீதம் இருக்கிறார்.

அருண் கோயல் ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். திடீரென்று அவர் அதிலிருந்து ராஜினாமா செய்தார். அவருக்கு தேர்தல் ஆணையர் பதவி வழங்கப்பட்டது. இது குறித்து உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு எடுத்துச் செல்லப்பட்டு, உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. தேர்தல் ஆணையம் நியமிக்கப்படுகிறப்போது உச்ச நீதிமன்ற நீதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூன்று பேர்களும் அமர்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.

ஆனால் மோடி அரசாங்கம் பெரும்பான்மையை பயன்படுத்தி பிரதமரால் நியமனம் செய்யக்கூடிய ஒன்றிய அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் இவர்கள் கூடி பெரும்பான்மை அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை நியமிப்பார்கள் என்று சட்டமே இயற்றி விட்டது. தேர்தல் ஆணையம் என்பது அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய உரிமை. அதையே மோடி அரசாங்கம் கேள்விக்குறியாக்கிவிட்டது.

எனவே வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் ஒரு ஜனநாயக முறையில் நடைபெறுமா என்கின்ற ஒரு மிகப்பெரிய ஐயம் ஏற்பட்டுள்ளது. ராஜினாமா செய்த அருண் கோயல், ஏன் ராஜினாமா செய்தார்? என்பதை நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும் அல்லது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட அரசாங்கம் நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும்.

பிரதமர் நாடு முழுவதும் பயணம் மேற்கொள்கிறார், அப்போதெல்லாம் ஊழல் பற்றி அவர் பேசுகிறார். பிரதமர் ஊழலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்று சொல்லுகிறார். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. ஆனால், தேர்தல் பத்திரம் ஒரு நிறுவனம் மூன்றாண்டுகள் லாபகரமாக இயங்கினால் அவர்கள் ஏழு சதவீதம் தேர்தல் பத்திரமாக வழங்கலாம் என்ற ஒரு நிபந்தனை இருந்தது. அந்த நிபந்தனை நீக்கப்பட்டு விட்டது. ஒரு நிறுவனம் லாபத்தில் இயங்கினாலும் நட்டத்தில் இயங்கினாலும் அவர்கள் விரும்பினால் எவ்வளவு நிதி வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று திருத்தப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் பத்திரம் மூலம் மிகப் பெரிய அளவில் ஆதாயம் பெற்ற கட்சி பாரதிய ஜனதா கட்சி 60% வரை நிதி பெற்று இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் இது தவறானது, மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திரம் யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்க வேண்டும், மார்ச் 13ஆம் தேதிக்குள் வலைதளங்களில் வெளியிட வேண்டும் என்றும் ஸ்டேட் வங்கிக்கு அறிவுறுத்தி உள்ளது. ஸ்டேட் பாங்க் கால அவகாசம் பெற்றுள்ளது. ஸ்டேட் வங்கியை கால அவகாசம் கேட்கச் சொன்னது யார்? ஒன்றிய அரசு தான் அவகாசம் கேட்கச் சொல்லி இருக்க வேண்டும். பெற்ற நிதியின் மூலம் அந்த ஊழல் அம்பலமாகிவிடும் என்பதால் அவர்கள் ஸ்டேட் வங்கியை அவகாசம் கேட்க வலியுறுத்தி இருக்கிறார்கள். இத்தகைய ஊழலில் ஈடுபட்டிருக்கக் கூடிய நரேந்திர மோடி ஊழல் பற்றி பேசுவதற்கு கிஞ்சிற்றும் அருகதை அற்றவர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். உச்ச நீதிமன்றம் கால அவகாசத்தை ஏற்கக் கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

நேர்காலம் தொட்டு பிரதமர் நிவாரண நிதி என்ற ஒரு நிதி மத்திய அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது. அது நிவாரண பணிகளுக்கு பயன்படுத்தப்படும். அதற்கு வரவு செலவு கணக்கு உண்டு. தகவல் உரிமைச் சட்டத்திலும் கேட்டு பெற முடியும். ஆனால் மோடி பிரதமர் ஆன பிறகு அது கலைக்கப்பட்டு pm கேர் சென்ற ஒரு புதிய நிதி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதில் எவ்வளவு நிதி வந்தது, எங்க போனது என்பதை யாரும் கேட்க முடியாது. இதைக் காட்டிலும் பெரிய ஊழல் என்னவாக இருக்க முடியும்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரிய வியாபாரிகள் தேச உடமையாக்கப்பட்டுள்ள வங்கிகளில் இருந்து கடன் பெறுகிறார்கள். அவர்கள் பெறுகிற கடனை திரும்ப செலுத்துவதில்லை. வட்டியும் செலுத்துவதில்லை. அவை அனைத்தும் வராக் கடனாக மாற்றப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.

வைர வியாபாரி நீரவ் மோடி துபாயில் இருக்கிற வங்கியில் நூறு கோடி கடன் பெற்றார். அவர் கடனை திருப்பி செலுத்தவில்லை, அது சம்பந்தமாக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. நீதிமன்றம் உடனடியாக 60 கோடி ரூபாய் திருப்பி செலுத்த வேண்டும் என்று உத்தரவு போட்டது. ஆனால் செலுத்தப்படவில்லை. இது போன்றவர்கள் தான் மோடியின் நண்பர்கள். எனவே மோடிக்கு ஊழல் பற்றி பேச அனுமதி இல்லை.

இந்தியாவில் இருக்கிற 140 கோடி மக்களும் என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று மோடி பேசுகிறார். குடும்பத்தை பற்றி எல்லாம் பேசுவதற்கு மோடிக்கு அருகதை இல்லை.

மோடி பேசும்போது தொழிற்துறை சிறப்பாக உள்ளது, பஞ்சாலைகள் சிறப்பாக செயல்படுகிறது என்று சொல்கிறார். ஆனால் அரசாங்கத்தால் நடத்தப்படுகிற நிறுவனங்களே மூடிக் கிடக்கிறது. என்.டி.சி ஆலைகள் இந்தியாவில் 23, தமிழகத்தில் மட்டும் 7, குறிப்பாக கோவையில் மட்டும் ஐந்து, இவை அனைத்தும் 2020 ல் இருந்து மூடப்பட்டு கிடக்கிறது. அரசு அச்சகம் மிகப்பெரிய நிறுவனம் பெரியநாயக்கன்பாளையத்தில் தான் இருக்கிறது. அதுவும் மூடப்பட்டு கிடக்கிறது.

பிரதமர் பொறுப்பு என்பது மிக உயர்ந்த பொறுப்பு அந்த பொறுப்பில் இருக்கக்கூடிய ஒரு நபர் பொய் சொல்லக்கூடாது. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. திட்டத்திற்கு மாநில அரசு 500 கோடி ரூபாய் என்று சொன்னால், மத்திய அரசு 500 கோடி தர வேண்டும் இதுவரை ஒரு பைசா கூட ஒன்றிய அரசு தரவில்லை. ஆனால் மோடி சென்னையில் பேசுகிற போது எங்களுடைய அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துகிறது என்று அப்பட்டமாக பொய் பேசுகிறார்.

இயற்கை சீற்றத்தால் சென்னை உட்பட நான்கு மாவட்டங்கள் அதேபோல தென் மாவட்டங்கள் ஐந்து மாவட்டங்கள் என மொத்தம் ஒன்பது மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் வாழ்க்கை நிலைகுழைந்து போனது. ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் வந்தார், நிர்மலா சீதாராமன் வந்தார், உயர்மட்ட குழு வந்தது, இவர்களெல்லாம் வந்து பார்த்துவிட்டு சென்றார்கள். டி.ஆர் பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் கே.சுப்புராயன் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச்சரை சந்தித்து தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டு இருக்கிற நிலைமைகளை எடுத்துக் கூறி 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வேண்டும் என்று கேட்டார்கள். உள்துறை அமைச்சரும் தருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் இதுவரை ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை.

பேரிடர் நிவாரண நிதி என்று ஒன்றிய அரசால் தனியாக ஒரு நிதி பராமரிக்கப்படுகிறது. இந்த குழுவிற்கு பிரதமர் தான் தலைவர். ஆனால் ஏன் தமிழகத்திற்கு பேரிடர் நிதி கொடுக்க மறுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. தமிழகத்திற்கு எந்த உதவியும் செய்யாமல் அவர்கள் பாதிக்கப்பட்டு நிற்கதியாக நிற்கிற பொழுது கூட உதவி செய்யாத பிரதமருக்கு, தமிழகத்தில் ஓட்டு கேட்க என்ன உரிமை இருக்கிறது என்று முத்தரசன் கேள்வி எழுப்பினர்.

தமிழகத்திற்கு வருவதற்கு மோடிக்கு தார்மீக ரீதியான உரிமை இல்லை. கேரளாவில் இந்தியா கூட்டணி தான் போட்டியிடுகிறது மூன்றாவது அணி இல்லை. ராகுல் காந்தி வெற்றி பெற்றாலும், ஆணி ராஜா வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி இந்தியா கூட்டணியின் வெற்றிதான்," என்றும் முத்தரசன் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore Cpi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment