திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் தூய்மை பணி உள்ளிட்ட பிற பணிகளுக்கு தனியார் மூலம் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஆர். ராஜா மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, "திருச்சி மாநகராட்சி 65 வார்டுகளிலும் வருகின்ற மார்ச் 24-ம் தேதி ஒப்பந்தம் மூலம் குப்பைகளை அகற்றுதல் மற்றும் தூய்மைப் பணிகளை செய்வதற்கு முழுக்க, முழுக்க தனியார் வசம் ஒப்படைத்திருப்பது ஒன்றிய அரசு கடைபிடித்து வரும் தனியார்மய, தாராளமய கொள்கைகளை அடிபிசகாமல் தமிழ்நாடு அரசு பின்பற்ற போவதாகவே தெரிகிறது.
இவ்வாறு தனியாரிடம் தூய்மைப் பணியை ஒப்படைப்பது சட்டத்திற்கு புறம்பானதாகும். இது ஊழலுக்கு அடி கோலும். சேவைத் துறையில் தனியாரை அனுமதிப்பது பொது மக்களுக்கு, சேவைக்கு பதில் சிரமமே மிஞ்சுவதைத்தான் இது நாள் வரையிலான அனுபவமாக நாம் பார்த்திருக்கிறோம். தற்போது இருக்கும் மக்கள் தொகை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு போதுமான அளவில் தூய்மைபணியாளர்கள் மற்றும் வாகனங்கள் இல்லை. 1700 சுய உதவிக் குழு மூலம் உருவாக்கப்பட்டுள்ள தூய்மை பணியாளர்களில் நூற்றுகணக்கானோர் 50 வயதை கடந்தவர்கள் உள்ளனர்.
திருச்சி மாநகர மக்களின் சுகாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் தூய்மை பணியை தனியாருக்கு மாற்றுவதை விட்டுவிட்டு நிரந்தர பணியில் புதிய வேலை வாய்ப்பை உருவாக்கிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
செய்தி: க. சண்முகவடிவேல்