ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஜே.சி.டி பிரபாகர், ஓ.பி.எஸ் அனுமதி அளித்தால் எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய ரூ.41,000 கோடி ரகசியத்தை நவம்பர் 21க்குள் பகிரங்கபடுத்த உள்ளதாக கூறியது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அதிரடி கேள்வி எழுப்பியுள்ளார்.
அ.தி.மு.க-வில் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், இருவரும் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இரு தரப்பும் பொதுவெளியில் ஒருவர் மீது ஒருவர் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
இந்த சூழலில்தான், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி, தங்கமணி அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசியபோது, கட்சி உடையக்கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிசாமி ஓ.பி.எஸ்-க்கு துணை முதல்வர் பதவி கொடுத்தார். பின்னர், சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனையின்போது இணை பொதுச் செயலாளர் பதவி தருவதாகவும் சொன்னார். ஓ.பி.எஸ் மகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவும் ஒப்புக்கொண்டார். ஆனால், ஓ.பி.எஸ் பிளவுபடுத்தவே முயற்சி செய்தார் என்று ஓ.பி.எஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார்.
தங்கமணியின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓ.பி.எஸ் ஆதரவாளரான ஜே.சி.டி பிரபாகர், எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய ரூபாய் 41,000 கோடி ரகசியத்தை வெளியிட நேரிடும் ஒரு பெரிய நெருப்பை பற்ற வைத்தார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் அனுமதியளித்தால் ரகசியத்தை பகிரங்கப்படுத்த தயார் என்றும் நவம்பர் 21க்கு முன்பாகவே பகிரங்கப்படுத்த உள்ளதாகவும் ஜே.சி.டி.பிரபாகர் அதிரடியாகக் கூறினார்.
ஜே.சி.டி பிரபாகர், இ.பி.எஸ் தொடர்புடைய ரூ.41,000 கோடி ரகசியத்தை அம்பலப்படுத்துவேன் என்று கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜே.சி.டி பிரபாகர் கூறும் ரூ. 41,000 கோடி பணம் என்ன என்று அ.தி.மு.க-விலும் தமிழக அரசியலிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “அந்த 41,000 கோடி ரூபாய் யாருடையது? அதற்கு வருமான வரி செலுத்தப்பட்டதா? என்பதை அரசு தலையிட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து கே. பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “ரூ.41 ஆயிரம் கோடி ரகசியத்தை வெளியிடுவேன்’ என்று அதிமுகவின் ஓபிஎஸ் தரப்பினரான ஜேசிடி பிரபாகரன், எடப்பாடி பழனிசாமியை எச்சரிக்கும் பேச்சு ஊடகங்களில் வந்துள்ளது. அவ்வளவு பிரம்மாண்டமான தொகை யாருடையது? அது ஏதாவது கணக்கிற்கு உட்பட்டதா? வருமான வரி செலுத்தப்பட்டதா? அரசு தலையிட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்” என்று பதிவிட்டு அதிரடி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையேயான சண்டையில், இ.பி.எஸ் தொடர்புடைய ரூ. 41,000 கோடி ரகசியத்தை பகிரங்கப்படுத்துவேன் என்று ஜே.சி.டி. பிரபாகர் பற்ற வைத்த நெருப்பு தமிழக அரசியலையே பரபரப்பாக்கியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“