கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் ஹைந்தவ சேவா சங்கம் என்ற அமைப்பு சமய மாநாடு ஒன்றை நடத்திவந்தது.
இந்த சமய மாநாடு கடந்த 80 ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது.
தற்போது இந்த மாநாட்டுக்கு இந்து அறநிலையத்துறை தடை விதித்துள்ளது. இதன் பின்னணியில் அமைச்சர் மனோ தங்கராஜ் இருப்பதாக பாஜகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் கனகராஜ் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, மண்டைக்காடு கோவிலில் தனியார் சம்பந்தப்பட்ட சமய மாநாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாக கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “ 1982ஆம் ஆண்டு நடைபெற்ற மண்டைக்காடு கலவரத்திற்கு காரணமானவர்கள் ஆர்எஸ்எஸ். இந்த மத பேத செயல்கள் குறித்து வேணுகோபால் கமிஷன் கருத்து தெரிவித்திருந்தது.
மேலும், “பொன். ராதாகிருஷ்ணன், அண்ணாமலை ஆகியோர் என்ன ஆன்மிக சொற்பொழிவாளர்களா? அவர்களுக்கும் ஆன்மிக சொற்பொழிவுக்கு என்ன தொடர்பு உள்ளது”
தொடர்ந்து, “மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் பெயரை சொல்லி பாஜகவினர் பணம் வசூலித்து வருவதை இந்து சமய அறநிலையத்துறை தடுத்துள்ளது.
அந்த வகையில், இதுவரை நடந்து வந்தது இந்து சமய மாநாடு அல்ல. சமய மாநாடு என்ற பெயரில் பாஜக உள்பட இந்துத்துவ அமைப்புகள் நடத்திய அரசியல் நிகழ்ச்சி. இதைத் தான் அரசு தடை செய்துள்ளது.
மேலும், குறிப்பிட்ட அரசியல் கட்சி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் பெயரால் செய்த வசூலுக்கு.சில அறநிலையத்துறை அதிகாரிகளின் துணையும் உள்ளது.
அத்தகைய அறநிலையத்துறை அதிகாரிகளை அடையாளம் கண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, மு.க. ஸ்டாலினை, எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது தரம் தாழ்ந்த அரசியல் எனக் கூறிய கனகராஜ், ஈரோடு கிழக்கில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சிறப்புமிக்க வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” என்றார்.
இந்த ஆண்டுக்கான மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா மார்ச் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/