ஐ.பி.எஸ் அதிகாரி சந்தீப் மிட்டல் வெளியிட்டு வரும் சமூக வலைத்தள கருத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் முதல்வர் பழனிசாமிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரியான சந்தீப் மிட்டல் தன்னுடைய அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளர் பக்கங்களில் அரசியல் தொடர்பான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அவருடைய கருத்துகள் சமூக ஊடகங்களில் கவனத்தைப் பெற்று வருகின்றன.
இந்த நிலையில், சந்தீப் மிட்டல் ஐபிஎஸ் சமூக ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஆளும் கட்சி சார்பான கருத்துகளை வெளியிட்டு வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழக முதல்வர் பழனிசாமி, உள்துறை செயலாளர், தமிழக போலீஸ் டிஜிபி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, “முதல்வருக்கு வணக்கம், பணியில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு உள்ள விதிகளில், அவர்கள் பொது வெளியில் வெளிப்படுத்தும் கருத்துக்கள் அரசியல் நோக்கம் கொண்டவையாக இருக்கக் கூடாது என்பதும் ஒன்றாகும். மேலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை பாதுகாப்பதே அவர்களுக்குள்ள கடமை.
தமிழக அரசின் கீழ் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வரும் சந்தீப் மிட்டல் தனது டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து இயங்குகிறார். இந்த பக்கம் அதிகாரப்பூர்வமான ஒன்று, டுவிட்டர் வெரிபிகேசன் பெற்றது. இந்த பக்கத்தில் அவர் தொடர்ச்சியாக மத்திய ஆளும் கட்சி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஆளும் கட்சி சார்பு இயக்கங்களின் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
உதாரணமாக, ஆகஸ்ட் 23ம் தேதி மேற்கொண்ட பதிவில், இடதுசாரிகளும், இஸ்லாமிய கருத்து கொண்டவர்களும் இந்த நாட்டின் வரலாற்றை பல நூற்றாண்டுகளாக வல்லுறவு செய்து வருவதாக குறிப்பிட்டிருக்கிறார்.
ஆகஸ்ட் 2ம் தேதியன்று ‘புதிய கல்விக் கொள்கையை கம்யூனிஸ்டுகளையும், கடும் இஸ்லாமியர்களையும் சலசலக்க செய்ய 3 காரணங்கள்’ என்ற கருத்துடன், ஒரு கட்டுரையை பகிர்ந்திருந்தார்.
வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பர் உள்ளிட்டோர் அரசுக்கு எழுதிய கடிதத்திற்கு நோக்கம் கற்பிக்கும் பதிவினை ஜூலை 13 அன்று மேற்கொண்டுள்ளார்.
மேலும், மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள், கொரோனா கால நிவாரணம் வலியுறுத்தி நடத்திய மக்கள் போராட்டத்திற்கு உள்நோக்கம் கற்பித்தும் பதிவு மேற்கொண்டுள்ளார்.
இவ்வாறான பதிவுகளை ஒட்டி அவருடைய டுவிட்டர் பக்கத்தை படிக்கும்போது அவருடைய பல பதிவுகள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சார்பு அமைப்புக்களை சார்ந்தவையாக இருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பேச்சுக்களை பகிர்ந்துள்ளார்.
இந்தியக் குடிமக்களுக்கு அவரவர் விரும்பும் அரசியலை தேர்வு செய்திட, ஆதரிக்க உரிமை உண்டு. ஆனால் பதவியில் உள்ள அதிகாரி அதனை மேற்கொள்ளும்போது கடமை தவறியவராகிறார். சீருடைப்பணியாளர்களுக்கான நடத்தை விதிப்படியும், சட்டப்படியும் அவருடைய செயல்பாடுகள் தண்டனைக்குரியவையாகும். இவருடைய பதிவுகள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் எதிரானதாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாகவும் இருக்கின்றன. எனவே இவர் பதவியில் நீடிப்பதற்கு தகுதியற்றவராகிறார்.
தமிழ்நாடு காவல்துறையின் கீழ் செயல்படும் அதிகாரியாக இருப்பதால், அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தங்கள் கவனத்திற்கு இப்பிரச்சனையை கொண்டுவருகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook