இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சி.பி.எம்) 24-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமக்கு அடுத்த மாதம் 72 வயதாகிறது. கட்சி அமைப்பு விதிகளின்படி 72 வயதாகிவிட்டால் எந்த பொறுப்புகளும் வகிக்க முடியாது. ஆகையால், தம்மை கட்சி விதிகளின் கீழ் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
முன்னதாக, இந்த மாநாட்டில் பேசிய சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் அமலில் இருக்கிறதா? இந்த ஆட்சியில் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது, போராட்டம் செய்பவர்கள் கைது செய்யப்படுகிற அவலநிலை இருக்கிறது என்று தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார்.
இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.எம் புதிய மாநில செயலாளர் பெ. சண்முகம், “உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும். ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவோம். மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் மக்கள் விரோத நடவடிக்கையில் பா.ஜ.க ஈடுபடுகிறது. வேலைவாய்ப்பை பறிக்கும் நடவடிக்கைகளில்தான் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்த ஊர்வலம் ஆர்ப்பாட்டம், போராட்டம் எல்லாம் இந்திய அரசியல் சாசனம் இந்திய நாட்டு மக்களுக்கு வழங்கி இருக்கக்கூடிய அடிப்படையான உரிமை. இந்த அடிப்படையான உரிமைகளை மறுப்பதற்கு எந்த அரசாங்கத்திற்கு உரிமை கிடையாது. எங்கள் கட்சியின் மாநில மாநாட்டு பேரணிக்கு கூட இந்த விழுப்புரம் மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் தான், அத்தகைய அத்தகைய கண்டனத்தை நாங்கள் தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஒரு கட்சியினுடைய மாநில மாநாட்டு பேரணிக்கு அனுமதி மறுப்பு என்பது எக்காரணம் கொண்டும் எங்களால் ஏற்க முடியாது. அந்த வகையிலே தான் காவல்துறையின் இந்த அணுகுமுறைக்கு எங்கள் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தன்னுடைய கண்டனத்தை வெளிப்படுத்தினார். இதை நிச்சயமாக தி.மு.க தலைமை புரிந்து கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று கூறினார்.
கே. பாலகிருஷ்ணன் பேச்சு குறித்து தி.மு.க-வின் முரசொலி நாளேடு கட்டுரை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பெ. சண்முகம்ம், “தி.மு.க உடன் பலமுறை உறவில் இருந்துள்ளோம். மாற்று கூட்டணியிலும் இருந்துள்ளோம். மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில், சமரசமற்ற போராட்டங்களை நடத்துவதன் மூலமாகத்தான் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற கட்சியாக இருக்கிறதே தவிர, ஏதோ தி.மு.க-வின் வெளிச்சத்திலே தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தி.மு.க தலைமை சொல்வது என்பது பொருத்தம் அல்ல. அந்த மாதிரி ஒரு செய்தியை முரசொலி பத்திரிக்கையில் அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள் அது பொருத்தம் அல்ல” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.